தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 111 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழை அதிகமாக இருக்கும் என்பதால் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
36 படகுகள்
கடந்த திங்கள்கிழமை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், “மழை, வெள்ளத்தால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது. அந்த நோக்கத்தோடு அரசு இயந்திரம் விரைவாக செயல்பட வேண்டும். அதற்கேற்ப தேவையான இயந்திரங்கள் மற்றும் படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என அறிவுறுத்தி இருந்தார்.
பருவ மழை மிக அதிகமாக பெய்ய இருப்பதால் சென்னை மாநகராட்சி அச்சத்தில் இருக்கிறது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. மழை வெள்ளத்தை சமாளிக்க மாநகராட்சி சார்பில் 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளன. மாதவரம் மற்றும் பெருங்குடி பகுதிகளுக்கு 2 படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. மற்ற மண்டலங்களுக்கும் இதேபோல் படகுகளைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர கால தேவை ஏற்பட்டால் மீனவர்களிடம் 80 படகுகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள்
மழைக்காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் தன்னார்வலர்கள், அவர்கள் துறைகள் சார்ந்த பணிகளை https://gccservices.chennaicorporation.gov.in/volunteer என்ற இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பம் செய்யலாம். தன்னார்வலர்களுக்கு அவர்கள் துறைகள் சார்ந்த பணிகள் வழங்கப்படும் எனவும், அவர்கள் அனைவருக்கும் மண்டல அலுவலர்கள் வழிகாட்டுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு படை வீர்ர்கள்
சென்னையில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்க செய்யும் வகையில் அலாரம் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மழைநீர் தேங்கினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டை போல் மிககனமழை போல் வந்தாலும் அனைத்து பகுதிகளிலும் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.