மலையாள நடிகர் சங்க அமைப்பான அம்மா நடிகைகளின் செக்ஸ் புகார்களால் ஆட்டம் கண்டுள்ளது. சமீப காலமாக கேரளா சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கொடுக்க பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வந்திருக்கிறது. இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகைகள் புகார் கொடுத்தும் எந்த நடவடிகையும் எடுக்கப்படாமல் இருந்தது.
சமீபத்தில் நடந்த அம்மா அமைப்பின் கூட்டத்தில் தொடர்ந்து எழுந்து வரும் செக்ஸ் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக சங்க பொறுப்பிலிருந்து அனைவரும் விலக முடிவு செய்யப்பட்டது. இதன்படி அம்மா அமைப்பின் தலைவராக இருக்கும் நடிகர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து 17 பேர்களும் தங்கள் பதவிகளை விட்டு விலகியிருக்கிறார்கள்.
நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அது வெளியான பின் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். நடிகர்கள், ஜெயசூர்யா சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதற்கிடையே வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். முன்னதாக ‘அம்மா’ அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரும் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா ’ அமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பில் இருக்கும் நிர்வாகிகள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் தார்மீக பொறுப்பேற்று செயற்குழுவை கலைக்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் சங்கத்தை மறுசீரமைத்து வலுப்படுத்தக்கூடிய ஒரு தலைமை விரைவில் பொறுப்பேற்கும் என்றும் அவர்கள் நம்புவதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லால், 17 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஒரே நேரத்தில் 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதால் கேரள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகைகள் குற்றம் சொல்லுபோது அவர்கள் அனைவரும் ஒரே குரலில் சொன்ன ஒரு குற்றச்சாட்டு சினிமாவில் அதிகாரமிக்க குழுவாக 15 பேர் கொண்ட குழு இருக்கிறது என்பதுதான். யார் இந்த 15 பேர் கொண்ட குழுவில் இருப்பவர்கள் என்கிற கேள்வி பல நாட்களாக மீடியாக்கள் முழுவதும் கேள்வியாக வலம் வந்து கொண்டிருந்தது.; இந்த நிலையில் ஒட்டு மொத்த நடிகர்கள் சங்க நிர்வாகிகளே தங்கள் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக நடிகர் ஷம்மி திலகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மோகன்லால் வாய் திறக்காதது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்திய நிகழ்வுகள் குறித்து ஷம்மி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், மோகன்லால் “பதிலளிக்கும் திறனை இழந்துவிட்டார்” என்று கூறினார். யார் தவறு செய்திருந்தாலும் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறிய அவர், “உப்பு சாப்பிடுபவர்கள் தண்ணீர் குடிப்பார்கள், அது யாராக இருந்தாலும் சரி” என்று கூறியதுடன், “நானும் பயத்தில் வாழ்கிறேன். ‘பவர் குரூப்’ என்ற சொல் ஹேமா குழுவால் பயன்படுத்தப்பட்டது, மேலும் அவர்களின் அறிக்கையில் அதன் இருப்புக்கான சான்றுகள் உள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்த குழுவில் யார் இருக்கிறார்கள் என்பதை எங்களால் அடையாளம் காண முடியும்” என்றார்.