கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவராஜ்குமார், உபேந்திரா இணைந்து நடிக்கும் படம் ‘45’. இந்த படம் கேஜிஎப் பாணியில் பான் இந்தியா படமாக உருவாகி, கன்னடம் தவிர, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் டீசர் வெளியீட்டுக்காக தனி விமானத்தில் படக்குழு பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகிறது. அந்த வகையில் சென்னை வந்தது படக்குழு. அழகான தமிழில் பேசினார் சிவராஜ்குமார். இவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் மகன்.
அவர் பேசியது: ‘‘நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். கோடம்பாக்கத்தில் எங்கள் வீடு இ ருந்தது. நியூ காலேஜில் படித்தேன். அப்பா பெரிய நடிகர் என்றாலும் நான் பஸ்சில்தான் பள்ளி, காலேஜ் போயிட்டு வருவேன். அப்பா பிஸியாக இருந்த காலம் அது. அவருக்கு நேரம் கிடைக்கும்போது, எங்க குடும்பத்தை மெரினா பீச் அழைத்து செல்வார். அப்போது நாங்க கூட்டுக்குடும்பம் 35க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருந்தோம்.
மெரினா சென்றால் கபடி விளையாடுவோம். பஜ்ஜி சாப்பிடுவோம். அரட்டை அடிப்போம். பக்கத்தில் உள்ள புகாரில் இருந்து பிரியாணி வரும், நன்றாக சாப்பிட்டு என்ஜாய் செய்வோம். அந்த சம்பவங்கள் இன்னமும் என் ஆழ் மனதில் இருக்கிறது. எப்போது சென்னை வந்தாலும் மெரினா பீச் செல்வேன். பழைய நினைவுகளை அசைபோடுவேன். சென்னையில் ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்று கொண்டிருந்தபோதுதான், நீங்க நடிக்குறீங்களா என என்னை ஒருவர் கேட்டார். நான் இவர் மகன் என்று சொன்னேன். வீட்டுக்கே வந்து என்னை நடிக்க வைக்க ஆசைப்படுவதாக அந்த டைரக்டர் சொன்னார். பின்னர், அப்பா என்னிடம் பேசிவிட்டு, நானே என் மகனை கன்னடத்தில் அறிமுகப்படுத்துகிறேன் என, என்னை ஹீரோ ஆக்கினார். 1986ல் நடிக்க ஆரம்பித்தேன். 40 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். வெற்றி, தோல்வி என அனைத்தையும் பார்த்துவிட்டேன். சந்தோஷம், வலி என இரண்டும் வரும். அது வாழ்க்கையை தேவை.
சென்னைக்கும் எனக்கும் நிறைய தொடர்பு உண்டு. இங்கே வந்தால் தாய்வீடு மாதிரியான மகிழ்ச்சி. குறிப்பாக, கமல்ஹாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு தடவை அவர் என் வீட்டுக்கு அப்பாவை பார்க்க வந்திருந்தார். அவரையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் என்னை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறினார். அந்த பாசத்தில் 3 நாட்கள் நான் குளிக்கவில்லை. நான் பெண்ணாக பிறந்து இருந்தால் அவரை கடத்திட்டுபோயிருப்பேன். அவர் படத்தை பர்ஸ்ட் ஷோ பார்ப்பேன். கடந்த ஆண்டு எனக்கு கேன்சர் பாதிப்பு வந்தது. அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்தேன். அங்கே கமலும் இருந்தார். என்னிடம் நலம் விசாரித்தார். அவர் ஆறுதலை மறக்கமாட்டேன். தமிழ் படங்கள் நிறைய பார்க்கிறேன். இப்ப கூட பிரதீப் ரங்கநாதன் படம் பார்த்து ரசித்தேன்.
ரஜினிக்கும், எங்கள் குடும்பத்துக்கும் நிறைய தொடர்பு. என்னை சின்ன வயதில் இருந்தே அவர் பார்த்து இருக்கிறார். அவர் என்னிடம் பேசினால் அழுதுவிடுவேன். அதனால், எதுவும் விசாரிக்கவில்லை. நான் அவருடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்தேன். அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு. இப்போது ஜெயிலர் 2 உருவாகி வருகிற. அதிலும் நான் நடிக்கிறேன். 45 படம் வித்தியாசமான படம். எனக்கு உடல் நலம் சரியில்லாத நிலையிலும், இந்த படத்தில் ஆர்வமாக நடித்தேன். நம்மால் மற்றவர்களுக்கு பிரச்னை வரக்கூடாது. நம்மால் தயாரிப்பாளர், படக்குழுவுக்கு தொல்லை வரக்கூடாது என்பது என் எண்ணம்.