No menu items!

இவன் இதோட காலி – சிவகார்த்திகேயன் பேச்சு

இவன் இதோட காலி – சிவகார்த்திகேயன் பேச்சு

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களில் அமரன் திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது. விஜய் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்க்கைக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இதனால் வியாபார ரீதியாகவும் அவரது கேரியர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அமரன் விழாவில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவ கார்த்திகேயன் பேசும் போது, ”நான் விழும்போது கை தந்து, எழும்போது கை தட்டி, எப்போதும் என்கூடவே இருக்கும் என் ரசிகர்களான சகோதர சகோதரிகளுக்கு நன்றி. மேஜர் முகுந்தை பற்றி நான் செய்திகளில் தான் தெரிந்துகொண்டேன். ஆனால் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்த கதையை சொன்னபோது அது என்னை மிகவும் தொந்தரவு செய்துவிட்டது. இந்த படம் முகுந்தின் பயணத்தை பற்றியது. அவர் ஒரு மிகச்சிறந்த தலைவர்.

படத்தின் இடைவேளை காட்சி காஷ்மீரில் இரவு நேரத்தில் படமாக்கப் பட்டது. அப்போது ஆக்ஷன் சொல்வதற்கு முன்பே கட் சொன்னார்கள். என்னிடம் வந்து, ’இப்போவே சுடாதீங்க. ஆக்ஷன் சொன்ன அப்புறம் சுடுங்க’ன்னு சொன்னார்கள். ’நானா சுடல.. கை நடுங்குது’ என்று நான் அவர்களிடம் சொன்னேன். ராஜ்குமார் பெரியசாமி பிக்பாஸ் இயக்குநராக இருந்தவர். பிக்பாஸ் போலவே என்னையும் காஷ்மீருக்கு 100 நாட்கள் கூட்டிச் சென்றுவிட்டார்.

ஜி.வி.பிரகாஷும் நானும் சீக்கிரமே இன்னொரு படத்தில் இணைகிறோம். நானும் சதீஷும் அட்லி குறித்து ஜி.வி.பிரகாஷிடம் ஆரம்ப நாட்களில் நிறைய பேசுவோம். அப்போது அவர், ‘யாருய்யா அந்த அட்லி?’ என்று கேட்பார். அதன்பிறகு தான் ‘ராஜா ராணி’ உருவானது. சாய் பல்லவியை ‘பிரேமம்’ படத்தில் பார்த்துவிட்டு அவர் நம்பரை எப்படியோ வாங்கி அவரது நடிப்பை பாராட்டி பேசினேன். உடனே ‘ரொம்ப நன்றி அண்ணா’ என்று சொல்லிவிட்டார். ஒருநாள் நாம் சேர்ந்து நடிப்போம் என்று சொன்னேன். அது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நடந்திருக்கிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பல கிளாசிக் படங்களை தமிழுக்கு கொடுத்துள்ளது. இந்த படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக அவர் சொன்னார். நான் ரஜினி ரசிகன் என்பது அவருக்கு தெரியும். ஆனால் அவர் அதையெல்லாம் யோசிக்காமல் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அதனாலதான் அவர் இந்த இடத்தில் இருக்கிறார். ‘அமரன்’ படத்தை ரஜினிகாந்த் முதல்நாளே பார்ப்பார். அதுதான் அவங்களுக்கு இடையில் இருக்கும் அன்பு. அவர்கள் இருவரும் தான் உண்மையான அபூர்வ சகோதரர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘பிரின்ஸ்’ படம் ரிலீஸ் ஆனபோது கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. நான் ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இவன் இதோட காலி என்றெல்லாம் என் காதுபடவே பேசினார்கள். அதன்பிறகு ஒருமுறை ஒரு நண்பரின் தீபாவளி கொண்டாட்டத்துக்காக சென்றபோது, அங்கு அஜித்குமார் இருந்தார். எனக்கு கைகொடுத்து ’உங்க வளர்ச்சியை பார்த்து நிறைய பேர் பாதுகாப்பற்றதன்மையை உணர்ந்தால் நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்’ என்று சொன்னார்.

நம் வாழ்க்கையில் பிரச்சினை என்பது சென்னை மழையை போன்றது. நாம் தயாராக இருக்கும்போது அது வராது. நாம் எப்போது ஜாலியாக இருக்கிறோமோ அப்போதுதான் வரும். அப்போது நாம் எதிர்நீச்சல் போட்டுதான் ஆகவேண்டும்”என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...