மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (சி.எம்.ஆர்.எல்.) பயண அட்டையிலிருந்து சிங்கார சென்னை அட்டைக்கு ஆக. 1-ம் தேதிமுதல் முழுமையாக மாற திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க வசதியாக, சி.எம்.ஆர்.எல். பயண அட்டையுடன் கூடுதலாக தேசிய பொது போக்குவரத்து அட்டை (சிங்கார சென்னை அட்டை) கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. மேலும் இந்த அட்டையை மாநகரப் பேருந்துகளிலும் பயன்படுத்தும் திட்டம் ஜன.6-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன்பிறகு, சிங்கார சென்னை அட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.
இந்நிலையில்,சி.எம்.ஆர்.எல். பயண அட்டையிலிருந்து சிங்கார சென்னை அட்டைக்கு ஆக. 1-ம் தேதி முதல் முழுமையாக மாற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன (சி.எம்.ஆர்.எல்.) பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.
க்யூஆர் பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும். பயணிகள் தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பை (ரூ.50-க்கும் குறைவாக) அடையும் போது, சி.எம்.ஆர்.எல். பயண அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுன்ட்டர்களில் ஒப்படைத்து விட்டு, அதற்கு பதிலாக சிங்கார சென்னை அட்டையை எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகையை புதிய சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றிக் கொண்டு, பயணிகள் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர்கள் கூறினர்.