குற்றவாளிக் கூண்டில் நிற்கிற அந்த ஆளை எங்கோ பார்த்த மாதிரியே இருந்தது. ஜட்ஜ் சுந்தரவல்லி கேஸ் கோப்புகளைப் புரட்டியபடியே யோசித்தார். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நின்றிருந்தான்.
லீவு முடிந்து இன்றுதான் கோர்ட்டுக்கு வருகிறார். பிக் பாக்கெட், ஷாப் லிஃப்ட்டிங் போன்ற சில்லரை வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புச் சொல்லி முடித்த பிறகு – இப்போது இந்த கொலைக் கேஸ் கட்டை கோர்ட் கிளார்க் பவ்யமாய் எடுத்து ஜட்ஜ் சுந்தரவல்லியின் முன்பு வைத்திருந்தார்.
இதற்கு முன் பணியிலிருந்த நீதிபதி இந்த வழக்கை முழுமையாக விசாரித்து விட்டார். சுந்தரவல்லி விசாரணையை மறு ஆய்வு செய்து இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும்.
கொலை வழக்கு என்பதால் குற்றப் பின்னணி, வாத, பிரதிவாதங்கள், சாட்சிகள், அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் பிரதிகள் எல்லாமே ஏற்கெனவே கிளார்க் மூலமாக அவருடைய அலுவலக மேஜைக்கு வந்து விட்டிருந்தது.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் செலவிட்டு எல்லா விபரங்களையும் கவனமாகப் படித்து உள்வாங்கி விட்டார். வழக்கிற்கு வலுவான மற்றும் பலஹீனமான தகவல்களை அடிக்கோடிட்டு சட்டக் குறிப்புகளையும் ஆங்காங்கே கிறுக்கலான கையெழுத்தில் எழுதி வைத்திருந்தார்.
மருத்துவப் பணிக்கு நிகராக இந்த நீதிபதிப் பதவியையும் மிகக் கவனமாக நூறு சதவித அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டியுள்ளது. கவனச் சிதறலோ சிறிய தவறுகளோ யாரோ ஒருவரின் தனிமனித வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடக்கூடியது.
என்ன தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது அவர் மனதுக்குள் ஏற்கெனவே அழுத்தமாகத் தீர்மானமாகி விட்டிருந்தது.
சுந்தரவல்லியின் இருபது வருட சர்வீஸில் இது போன்ற பெரிய கேஸ்களில் பரிசீலித்துத் தீர்மானித்த முடிவு தீர்ப்பு வழங்கும்போது மாறியதே இல்லை. மாற வேண்டிய தேவையும் ஏற்பட்டதே இல்லை. ஆனால், இன்று சிறிய தடுமாற்றம்.
அந்தச் சுருட்டை முடி. பிரவுன் விழிகள். எம்ஜியார் போல இரட்டைத் தாடை.
கேஸ் கட்டுக் காகிதங்களில் அவன் பெயர் சுப்ரமணியம் என்றே எல்லா இடங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவன் ‘சுச்சு’ என்பதை நேரில் பார்த்த சில விநாடிகளிலேயே கண்டுபிடித்து விட்டார் சுந்தரவல்லி.
அஞ்சாங்கிளாஸ் வரை அவரோடு படித்த அதே சுச்சு. சுப்ரமணியம் என்ற நீளமான பெயர் ரெக்கார்டில் இருந்திருக்கலாம். சுச்சு என்றுதான் கூப்பிட்டுப் பழக்கம். அப்படித்தான் மனதிலும் அவன் பதிந்திருக்கிறான்.
பால்ய நண்பன். கிளாஸ்மேட். ‘என்னை நீதிபதியாகவும் அவனைக் கொலைகாரனாகவும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிற இந்த வாழ்க்கை எத்தனை கொடூரமானது?’ – மெல்லிய கவலையுடன் அவருடைய மனது கேள்வி எழுப்பியது.
சுந்தரவல்லி கேஸ் கட்டிலிருந்து தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தார்.
“இந்த வழக்கு ஆல்மோஸ்ட் முடிஞ்சிருச்சு. நான் தீர்ப்பு எழுத வேண்டியதுதான் பாக்கி. அரசுத் தரப்பில் நீதான் இந்தக் கொலையை செஞ்சேன்னு சாட்சிகளையும் ஆதாரங்களையும் முன் வெச்சிருக்காங்க. உன் சார்பா ஆஜரான வக்கீலும் தன்னோட வாதங்களை எடுத்து வெச்சிருக்கார். கடைசியா நீ ஏதாவது சொல்ல விரும்பறியா?”
“ஏற்கெனவே சொன்னதுதான். நான் கொலை செய்யல.”
அவனையே சற்று நேரம் பார்த்தபடி அமர்ந்திருந்த சுந்தரவல்லி கண்ணாடியைக் கழற்றி விட்டு, கேஸ் கட்டை மூடி வைத்தபடி – “இந்த வழக்கின் தீர்ப்பை நாளைக்கு ஒத்தி வைக்கிறேன்” எழுந்து கோர்ட் அறையை விட்டு வெளியேறிச் சென்றார்.
போலிஸ் சுச்சுவை இழுத்துக் கொண்டு சென்றது.
சுந்தரவல்லி உதவியாளரைக் கூப்பிட்டு – “இந்த கொலைக் கைதியை நான் தனியே சந்திக்க ஏற்பாடு செய்யறிங்களா?” என்றார்.
“சரி மேடம்.”
அவருக்கு சுச்சுவின் நினைவுகளே திரும்பத் திரும்ப வந்தது.
சுந்தரவல்லியின் பால்யம் ஏழ்மையில் மூழ்கிய ஒன்று. ஒரே யூனிபார்மை தினமும் துவைத்து, கசக்கி காயப்போட்டு ஸ்கூலுக்கு வருவாள் சின்ன வயது சுந்தரவல்லி. தோள்ப்பட்டையிலும் முட்டியிலும் உடை நைந்து போய் எந்த நேரமும் கிழிந்து விடும் போல நூல் தெரியும். சுச்சுவின் குடும்பம் வசதியானது. இரட்டை அறைகள் கொண்ட டிபன்பாக்சில் சாக்லேட்டும் பிஸ்கட்டுகளும் கூட கொண்டு வருவான். சுந்தரவல்லியுடன் பகிர்ந்துகொள்வான். ஒன்றாக விளையாடுவார்கள். அது ஏழை பணக்காரர் வித்தியாசமில்லாமல் எல்லோருமே ஒன்றாக அரசுப் பள்ளிகளில் படித்த காலம்.
அவளுடைய அப்பா நூற்பாலையில் கடை நிலை ஊழியர். திடீரென ஏற்பட்ட நீண்ட நாள் மில் வேலை நிறுத்தமும் ஒரு சின்ன விபத்தும் அவரை செயலிழக்க வைத்து குடும்ப வருமானம் பாதிப்புக்குள்ளானது. சுந்தரவல்லியின் படிப்பை நிறுத்தி விட்டார்.
சுச்சு வீடு தேடி ஓடி வந்து விட்டான். சிறுவனாகவே இருந்தாலும் அந்தச் சமயத்தில் ஒரு பெரிய மனிதன் போல செயல்பட்டிருந்தான். அவளுடைய நிலைமையைக் கேள்விப்பட்டு அவனுடைய அப்பாவிடம் உதவக் கேட்க, பெண்ணைத் திரும்பவும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனையோடு, ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் சுந்தரவல்லியின் அப்பாவின் நிலைமைக்குத் தகுந்த மாதிரியான ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
தடம் மாறிய ரயில் பெட்டி மீண்டும் தண்டவாளத்தில் ஏறியது.
இதர கோர்ட் பணிகளில் மூழ்க ஆரம்பித்த பின் இந்த நினைவுகள் மங்கிப் போனது.
மாலையில் கிளார்க், “மேடம், அந்தக் கைதியைச் சந்திக்க ஏற்பாடு செஞ்சிட்டேன். கார் ரெடியா இருக்கு” என்றார்.
புராதானக் கட்டிடம் ஒன்று ஜெயிலாகி இருந்தது. சுண்ணாம்பு அடித்துப் பல காலம் ஆனதால் சாயம் போன சுவர்கள். ஆங்காங்கே காரை பெயர்ந்து பழுப்புப் பொத்தல்களும் இருந்தன.
போலிஸ்காரர்கள் சல்யூட் அடித்து, மரியாதை தெரிவித்து, சுந்தரவல்லியை உள்ளே அழைத்துப் போனார்கள். வெளியே இன்னும் இருட்டவில்லை என்றாலும் ஜெயிலுக்குள் மனதை அழுத்தும் இருள் சூழ்ந்திருந்தது.
வராந்தாவில் ஆங்காங்கே சோம்பேறியாக எரியும் மஞ்சள் விளக்குகள். அதிலும் சில பல்புகள் வோல்ட்டேஜ் குறைபாட்டினால் மங்குவதும் ஒளிர்வதுமாக இருந்தன.
விசாரணை அறை ஒன்றில் சுச்சு உட்கார வைக்கப்பட்டிருந்தான். சுந்தரவல்லியின் பாதுகாப்பு கருதி அவன் கைகள் விலங்கு பூட்டப்பட்டு சேரோடு பிணைக்கப்பட்டிருந்தான்.
போலிஸ்காரர் பவ்யமாய்க் கதவைத் திறந்து சுந்தரவல்லி உள்ளே செல்ல கையைக் காட்டினார்.
அவருடன் வர முற்பட்ட போலிஸ்காரரிடம், “நான் பார்த்துக்கறேன். நீங்க இங்கேயே நிக்கலாம்” என்றதும், தயக்கமாய் நின்று விட்டார்.
சுந்தரவல்லி கதவைச் சாத்தி விட்டு – சுச்சுவுக்கு எதிரே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தார். அவனையே உற்றுப் பார்த்த அவரை அவனும் நிலைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னைத் தெரியுதா?” என்றார் சுந்தரவல்லி.
“தெரியும். புதுசா வந்திருக்கிற ஜட்ஜ். தீர்ப்பு எழுதப் போறவங்க. என்னோட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியோ, கமாவோ போடப் போறவங்க.”
“அதைக் கேட்கலை. இப்ப நான் இங்கே ஜட்ஜா வரலை. என்னை யாருன்னு நிஜமாவே உனக்குத் தெரியலையா?”
ஆங்காங்கே ஓரிரு வெள்ளை முடிகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்த அவருடைய தலையையும் தடித்த கண்ணாடிக்குப் பின்னாலிருந்த கண்களையும் உற்றுப் பார்த்தான். பெண்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு பால்ய வயதுத் தோற்றத்துக்கு எந்த சம்பந்தமுமில்லாமல் வெகுவாக மாறி விடுகிறார்கள்.
சில விநாடி நிலை குத்திய பார்வைக்குப் பின்னரும் சந்தேகத்துடனே மறுத்தான். “எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கு. ஆனா யார்ன்னு தெரியலை.”
“சுச்சு, நான்தாண்டா சுந்தரவல்லி.”
சின்ன அதிர்வு கலந்த ஆச்சரியத்தோடு நிமிர்ந்து உட்கார்ந்தான். அவன் அசைந்ததில் கை விலங்கு அந்தத் தகர மேஜையில் உரசி சப்தம் எழுப்பியது.
“நீ… நீ இப்ப ஜட்ஜா வல்லி?”
“ஆமா. வக்கீலுக்குப் படிச்சேன். ஹை கோர்ட் வரைக்கும் வந்துட்டேன். நீதிபதி பொறுப்பையும் கொடுத்தாங்க. பல வருஷம் ஆச்சு.”
அவன் என்ன பேசுவது என்று தெரியாமல் உறைந்த மாதிரி உட்கார்ந்திருந்தான்.
சுந்தரவல்லியே தொடர்ந்து பேசினார். “நீ மட்டும் இல்லைன்னா நான் படிப்பைத் தொடர முடியாம எங்கேயாவது பத்துப் பாத்திரம் தேய்ச்சி பிழைப்பை ஓட்டிட்டு இருப்பேன் சுச்சு. நீ உன்னோட அப்பா கிட்டே சொல்லி என்னோட அப்பாவுக்கு ஒரு நல்ல இடத்தில் வேலை வாங்கிக் கொடுத்தே. அவர் அந்த உதவியை செய்ததோட அல்லாமல் என்னோட படிப்பை நிறுத்தக் கூடாதுன்னு எங்க அப்பா கிட்டே சத்தியமும் வாங்கினார். அந்த சத்தியத்தை அப்பா கடைசி வரைக்கும் காப்பாத்தவும் செஞ்சார்.
இன்னிக்கு ஜட்ஜா இங்கே நிக்கறதுக்கு முழுக் காரணமும் நீதான். ஆனா எனக்கு வரம் கொடுத்தவன் தலை மேலேயே கை வைக்க வெச்சிருக்கும் இந்த விதியை நினைச்சு பதறி நடுங்கிப் போயிருக்கேன்.
என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தே? இந்தக் கொலைக் குற்றத்துக்கு முன்னாலேயே பல சில்லரை வழக்குகள் உன் மேல பதிவாகி இருக்கு.”
சுச்சு அவர் பேச்சை உள்வாங்க சற்று நேரம் எடுத்துக் கொண்டபின், மெதுவாகச் சொன்னான். “அப்பாவோட தொழில் திடீர்ன்னு நலிஞ்சு போக ஆரம்பிச்சிருச்சு. அவர் எவ்வளவோ பேருக்கு உதவினார். ஆனா அவருக்கு உதவ யாரும் இல்லை. அதுக்கப்புறம் எங்க வாழ்க்கையே தலைகீழாயிருச்சு. விடு வல்லி. இனிமே எதையும் மாத்த முடியாது.”
“அந்தச் சின்ன வயசுல அன்னிக்கு நான் நெகிழ்ந்து போய் அழுது உன் கிட்டே இந்த உதவிக்கு என்ன கைம்மாறு செய்வேனோன்னு தெரியலையேன்னு புலம்பினேன். அப்போ நீ என்ன சொன்னே ஞாபகம் இருக்கா?”
தலையசைத்தான். “டீச்சர் சொன்ன ஒரு குட்டிக் கதையைச் சொன்னேன். ஆத்துல விழுந்த ஒரு கட்டெறும்பு இலையைப் பிடிச்சு தத்தளிச்சிட்டிருக்கும் போது காப்பாத்தின பறவைக் கதையைச் சொன்னேன். எப்போதாவது ஒரு நாள் இதே மாதிரி நான் உனக்கு திருப்பி உதவி செய்யறேன்னு எறும்பு சொன்னப்ப பறவை சிரிச்சதாம். ஆனா அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தது. ஒரு வேடன் அந்தப் பறவையைக் கொல்ல அம்பை விடப் போனப்ப அவன் காலைக் கடிச்சு குறி தவற வெச்சது எறும்பு. அன்னிக்கு தன்னோட உயிரைக் காப்பாத்தினதுக்கு நன்றிக்கடனா இன்னொரு நாள் அந்தச் சின்ன எறும்பு பறவையோட உயிரைக் காப்பாத்திருச்சு.”
“ஆமா. கரெட். நீ எதையும் மறக்கல.”
சுந்தரவல்லியை உற்றுப் பார்த்த சுச்சு மெதுவாகக் கேட்டான். “ஓ அன்னிக்கு சின்ன வயசுல நான் செஞ்ச உதவிக்கு பதிலாக இப்போ என்னோட உயிரைக் காப்பாத்தி தீர்ப்பு சொல்லப் போறியா?”
சுந்தரவல்லி தலையசைத்தாள். “இல்ல.”
அவன் நிமிர்ந்தான்.
சுந்தரவல்லி தொடர்ந்து சொன்னார். “கொடுத்திருக்கிற ஆதாரங்களையும் வாக்கு மூலங்களையும் ஒரு நீதிபதி எப்படி வேணா இன்ட்டர்ப்ரெட் பண்ணலாம். சட்ட அறிவைப் பயன்படுத்தி தீர்ப்பின் திசையை மாத்துற சாத்தியமும் இருக்கு. இப்ப சில நீதிபதிகள் தங்களோட சொந்த விருப்பு வெறுப்புகள், கட்சி சார்புகள், சித்தாத்தங்களுக்கு சாதகமா தீர்ப்பை மாத்துற அவலங்களும் நடக்காம இல்லை.
ஆனா நான் அந்த மாதிரி நீதிபதியா இருக்க விரும்பலை. நீ கொலை செய்தியா இல்லையான்னு எனக்குத் தெரியாது. விருப்பு வெறுப்பற்ற நியாயமான பார்வையில் உன்னோட வழக்கை அணுகினா சட்டப்படி உன்னோட குற்றத்தை உறுதி செய்வதுதான் என் தீர்ப்பாக இருக்க முடியும். நன்றிக்கடன்ங்கிற பேர்ல நியாயத்துக்குப் புறம்பா செயல்பட என்னால் முடியாது. என்னை மன்னிச்சிரு சுச்சு.”
இருக்கையை விட்டு கனத்த மனதுடன் எழுந்த சுந்தரவல்லி இரண்டடி வைத்த பின் நின்றார். திரும்பி அவனைப் பார்த்தார். “ஆனா, வேறொரு வகையில் உதவ சந்தர்ப்பம் கொடுத்திருக்கு வாழ்க்கை. உனக்கு ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறதா விசாரிச்சு தெரிஞ்சிகிட்டேன். ஒருத்தி காலேஜ் படிக்கிறா. இன்னொருத்தி ப்ளஸ் டூ. இனிமே அவங்க படிப்பும் வாழ்க்கையும் என் பொறுப்பு.”
இருள் சூழ்ந்த அந்த அறையில் சுச்சு உறைந்து போய் அமர்ந்திருந்தான். சுந்தரவல்லி வெளியேறிச் சென்ற கதவிடுக்கிலிருந்து மட்டும் ஒரு மெல்லிய வெளிச்சக் கீற்று.
Excellent….