நடிகர் சரண்ராஜ் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வில்லன் நடிகராக அறிமுகமாகி பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியின் நண்பராக பாட்ஷா என்ற கேரக்டரில் நடித்தது அவருக்கு பெரிய புகழைக் கொடுத்தது.
இதே போல ஜென்டில்மேன் படத்தில் சரண்ராஜுக்கு இயக்குநர் ஷங்கர் சிறந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தார். குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் டென்ஷனாகும் போலீஸ் அதிகாரியாகவும், அவரை பிடிக்க முடியாமல் பழநி கோயிலில் மொட்டை அடித்துக் கொள்வது போலவும் நடித்திருந்தார். இது ரசிகர்களிடைய பெரிய வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து பல கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்த சரண்ராஜ், கன்னடம், தெலுங்கு, இந்தி என்று எல்லா மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இடையில் சரியான திரைப்பட வாய்ப்புக் கிடைக்காமல் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த அவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார். இப்போது தனது மகனை ஹீரோவாக்கி ‘குப்பன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சரண்ராஜ்.
பொதுவாக சரண்ராஜ் பழகுவதற்கு இனிமையானவர் தனிப்பட்ட முறையில் சினிமாவில் யாராது உதவி என்று கேட்டால் அதை செய்து கொடுப்பார். யாரிடமும் கோபப்பட்டு பேசமாட்டார். ஆனால் மனதில் உள்ளதை பேசி விடுவார். இதனால் அவருக்கு படமும், கிடைத்தது, சில நேரங்களில் பட வாய்ப்பும் பறி போனது. இது பற்றி அவர் அலட்டிக்கொண்டது கிடையாது.
இந்த நிலையில்தான் சரண்ராஜ் தனது மகன் தேவ் ஹீரோவாக நடிக்க படத்தை தானே இயக்கியிருக்கிறார். இந்த பட விழாவில் சரண்ராஜ் பேசும்போது, “ நான் என் மகனை ஹீரோவாக்கி இயக்கியிருக்கும் குப்பன் படத்திற்கு கெஸ்ட்டாக முன்னணி ஹீரோக்கள் யாரையாவது கூப்பிடலாம் என்று நினைத்தேன். எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான் ஆனால் யாரையும் நான் போய் கூப்பிடவில்லை. நான் அழைத்து வரமாட்டேன் என்று அவர்கள் சொல்லிவிட்டால் எனக்கு வருத்தமாக இருக்கும். அதனால் நாங்களே இங்கு வந்து விட்டோம். இன்றைக்கு நல்ல படங்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். மகாராஜா போல் ஒரு படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அதேமாதிரி கதை இல்லாமல் படம் எடுத்தால் மக்கள் ரசிப்பதில்லை.
இந்தியன் 2 படத்தை நானும் பார்த்தேன். இந்த படம் எடுத்தபோது ஷங்கர் தூங்கிட்டாரோ என்று நினைக்கிறேன். இப்படி அவர் எடுக்க மாட்டார். பாட்டுக்கே பிரமாண்டமாக யோசிப்பவர் அவர். அதனால் எனக்கும் அந்த படம் சரியாக இல்லை. நான் அடுத்த படம் எடுக்க தயாராக இருக்கிறேன். நிறைய இளம் இயக்குனர்கள் உதவி இயக்குனர்கள் பலரும் நல்ல கதைகளை வைத்துக் கொண்டு பட வாய்ப்புக்கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்கள் எனக்கு நல்ல கதை சொன்னால் அதை படமாக்க நான் தயாராக இருக்கிறேன். அதனால் புதியவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து கதை சொல்லுங்கள் உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்” என்றார் சரண்ராஜ்.