சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்று கூறி, அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேகலாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்க துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
ஏக்கருக்கு 40 ஆயிரம்: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க என்எல்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது அப்பகுதியில் இருந்த பாசன நிலம் பாதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க என்எல்சி முன் வந்தது. என்எல்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு என்எல்சி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே நிலத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட இழப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, “இழப்பீடு தொகையை வரும் ஆகஸ்டு மாதம் 6ஆம் தேதிக்குள் வழங்கும்படி” சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், “செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு நில உரிமையாளர்கள் மேற்கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது. நில உரிமையாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது. அப்படி செய்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்எல்சி பாதுகாக்க வேண்டும்” என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் நேரில் வலியுறுத்தல்
‘இண்டியா’ கூட்டணி சார்பில் 21 எம்.பி.க்கள் குழு இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தனர். அப்போது மணிப்பூர் வன்முறை குறித்து குடியரசுத் தலைவரிடம் மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் விளக்கிக் கூறினர். தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் சார்பில் மணிப்பூர் சென்று வந்த 21 எம்.பி.க்கள் உட்பட, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 31 எம்.பி.க்கள் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்தோம். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தோம். அப்போது, மணிப்பூர் நிலவரம் குறித்து, குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை, மறுவாழ்வு மற்றும் பிற நிலவரங்கள் குறித்து நாங்கள் விளக்கினோம். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மாநிலத்தில் அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய மிக முக்கியமான கோரிக்கை” என்று தெரிவித்தார்.
திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கொங்கு நகரில் உள்ள திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, மற்றும் தமுத்துப்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் உள்ள பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜியின் கைதுக்கு பின்னர் அவரது ஆதரவாளர் என்று சந்தேகப்பட்ட இவரது வீட்டில் தற்போது அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த துணை நடிகர் மோகன்: கமலுடன் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்தவர்
சேலம் மாவட்டம், மேட்டுரைச் சேர்ந்தவர் சின்னு. இவரது இளைய மகன் மோகன் (வயது 60). திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். கமல்ஹாசன் நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்புவின் (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். மேலும், ‘நான் கடவுள்’, ‘அதிசய மனிதர்கள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சொந்த ஊரை விட்டு திருப்பரங்குன்றம் பகுதிக்கு சில ஆண்டுக்கு முன்பு வந்தார். அங்கே வறுமை காரணமாக பெரிய ரத வீதியில் அவர் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 31) பெரிய ரத வீதியில் மோகன் ஆதவற்ற நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் போலீஸார் மோகனின் உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேட்டூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் மேட்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மோகனுக்கு 2 சகோதார்கள், 3 சகோதரிகள் உள்ளனர்.