இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி மெக்சிகோவில் வரும் செப்டம்பர் 18-ம் தேதி நடக்கப் போகிறது. ஆனால் செய்தி அதுவல்ல. இந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்தவரான ரூமி அல்கஹ்தானி பங்கேற்கிறார் என்பதுதான் உலகை அச்சர்யப்படுத்தும் செய்தி.
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?
அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதுபோன்ற அழகிப் போட்டிகளில் அந்நாட்டு பெண்கள் இதுவரை பங்கேற்றதில்லை. இந்த சூழலில் முதல் முறையாக சவுதி அரேபியாவில் இருந்து இந்த பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கப் போகிறார் ரூமி அல்கஹ்தானி என்ற பெண்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அல் சவுதின் ஆட்சியில் பல்வேறு மாற்றங்கள் அறிமுகமாகி வருகின்றன. அங்குள்ள பெண்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமை, ஆண்களுடன் சேர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான உரிமை, ஆண்களின் ஒப்புதல் இல்லாமல் பெண்கள் பாஸ்போர்ட்டை பெறும் உரிமை என பல உரிமைகள் இவரது ஆட்சியின்கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் ஒரு புதிய உரிமையாக பிரபஞ்ச அழகி போட்டியில் ரூமி அல்கஹ்தானி பங்கேற்கிறார். சவுதி அரேபியில் இஸ்லாமியப் பெண்களுக்கு உடைக் கட்டுப்பாடுகள் ஒரு காலத்தில் அதிகம் உண்டு. அழகிப் போட்டிகளில் பங்கு பெறும் பெண்கள் குறைந்த உடைகளில் வலம் வருவார்கள். இப்போது இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா அதற்கு அனுமதி அளித்துள்ளது.
பிரபஞ்ச அழகி போட்டியில் தான் பங்கேற்பது தொடர்பாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரூமி அல்கஹ்தானி. கடந்த சில மாதங்களாகவே அவர் அழகிப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான அழகிப் போட்டியில் அவர் பங்கேற்று இருந்தார். உள்நாட்டு அளவில் நடைபெற்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்ற அவர், அவற்றில் முதல் இடத்தைப் பிடித்திருந்தார். மிஸ் சவுதி அரேபியா, மிஸ் மிடில் ஈஸ்ட் உள்ளிட்ட ஏராளமான அழகிப் பட்டங்களுக்கு அவர் சொந்தக்காரராக இருக்கிறார்.