சந்தானம், சூரிக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே காமெடியனாக இருந்து ஹீரோ ஆனவர்கள். அந்தவகையில் இருவரும் மே 16ம் தேதி இவர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். ஆம், சந்தானம் கதாநாயகனாக நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படமும், சூரி ஹீரோவாக நடித்த மாமன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது
இது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறியது
சந்தானம் நடித்த தில்லுக்குதுட்டு பெரிய வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகமான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதன் அடுத்த பாகம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற பெயரில் உருவானது. இதில் சந்தானத்துடன், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர்.
தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து தயாரித்துள்ளனர். இதுவும் பேய்கதை என்றாலும் சொகுசு கப்பலில் தொடங்கி, தீவு ஒன்றில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் மே 16ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், கருடன், கொட்டுக்காளிக்குபின் சூரி கதைநாயனாக நடிக்கும் படம் மாமன். இந்த படத்தை விலங்கு வெப் சீரியசை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி உள்ளார். 6 வயது சிறுவனுக்கும், அவர் தாய் மாமனான சூரிக்கும் இடையேயான பாசமே படக்கதை. இதில் சூரியுடன் ராஜ்கிரண், ஐஸ்வர்ய லட்சுமி, சுவாசிவா உட்பட பலர் நடித்துள்ளனர். அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். திருச்சி சுற்று வட்டாரத்தில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படமும் மே 16ல் ரிலீஸ் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சந்தானத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் , சூரியின் மாமன் படங்கள் நேருக்குநேர் மோதுவது உறுதியாகி உள்ளது. மே மாதம் கோடை விடுமுறை என்பதாலும், சூர்யாவின் ரெட்ரோ தவிர வேறு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாததாலும் இந்த படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் ஏப்ரல் 24ம் தேதி வடிவேலு நடித்த கேங்கர்ஸ் படம் ரிலீஸ்ஆக உள்ளது. அதில் சுந்தர்.சி ஹீரோ, வடிவேலு காமெடி பண்ணியுள்ளார். ஆக, இந்த கோடைக்கு வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.