ஸ்மார்ட் போன்களில் சைபர் பாதுகாப்பு செயலி ‘சஞ்சார் சாத்தி’ கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு நேற்று வாபஸ் பெற்றது.
இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு சைபர் பாதுகாப்பை அளிக்கும் நோக்கத்தில், சஞ்சார் சாத்தி என்ற செயலியை ஸ்மார்ட் போன்களில் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து விற்பனை செய்யும்படி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க ஆப்பிள் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த செயலி மூலம் மக்களை மத்திய அரசு உளவு பார்க்க திட்டமிடுகிறது என காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். மக்களின் அந்தரங்க உரிமைமீறல் மற்றும் உளவு பார்க்கப்படுதல் தொடர்பான சந்தேகங்களை இந்த செயலி எழுப்புவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பினர். இதற்கு மக்களவையில் நேற்று பதில் அளித்த மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறியதாவது:
நாட்டு மக்களுக்கு சைபர் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காக சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. இந்த செயலி பாதுகாப்பானது, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களிடம் இருந்து மக்களை காக்க இது உதவும். பாதுகாப்பை தவிர வேறு எந்த செயல்பாடும் இதில் இல்லை. இந்த செயலியை மக்கள் விரும்பவில்லை என்றால், அதை மற்ற செயலிகள் போல் நீக்கி கொள்ளலாம்.
உளவு பார்க்க முடியாது: சஞ்சார் சாத்தி செயலி மூலம் யாரையும் உளவு பார்க்க முடியாது. அப்படி எதுவும் நடக்காது. இந்த செயலி மக்களின் பாதுகாப்புக்கானது. மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான சக்தியை அரசு அளிக்க விரும்புகிறது. இந்த செயலியை நீங்கள் நீக்க விரும்பினால், அவ்வாறு செய்து கொள்ளலாம். இது கட்டாயமில்லை. நீங்கள் இந்த செயலியை பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அதற்காக நீங்கள் பதிவு செய்ய வேண்டாம். அது செயலற்ற நிலையில் இருக்கும்.
டிஜிட்டல் மோசடிகள் மற்றும் திருட்டுகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கவே இந்த செயலி உள்ளது. இந்த விஷயம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியவில்லை. இந்தச் செயலியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது எங்கள் பொறுப்பு. எனினும், கட்டாயம் என்ற உத்தரவை அரசு வாபஸ் பெற்றுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறினார்.



