‘சாத்தானின் வசனங்கள்’ நாவலுக்காக கடந்த 34 ஆண்டுகளாக கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மேடையில் கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருக்கும் ருஷ்டி பேச முடியாத நிலை இருப்பதாகவும் ஒரு கண்ணை அவர் இழக்கக்கூடும் என்றும் அவரது ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.
யார் இந்த சல்மான் ருஷ்டி? அவர் மீதான இந்த கொலை வெறி தாக்குதலுக்கு என்ன காரணம்?
சல்மான் ருஷ்டி, இந்தியாவில் பிறந்தவர்; பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்றுள்ளார். கடவுள் மறுப்பாளரான ருஷ்டியின் முதல் நூல் ‘க்ரிமஸ்’. இந்த நூல் பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஆனால், 5 ஆண்டுகள் கழித்து 1981இல் எழுதிய ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ நாவலுக்காக புக்கர் பரிசு பெற்று சர்வதேச அளவில் புகழ் பெற்றார். இந்தியாவைப் பற்றி பேசிய இந்த நாவல் பிரிட்டனில் மட்டும் பத்து லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையானது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1983இல் தனது மூன்றாவது நூலான, பாகிஸ்தானைப் பற்றிய ‘ஷேம்’ நாவலை வெளியிட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிகரகுவா நாட்டு பயணத்தைப் பற்றிய ‘தி ஜாகுவார் ஸ்மைல்’ நாவலை எழுதினார்.
மனதில் பட்டதை வெளிப்படையாக பதிவு செய்யக் கூடியவராகவும், நவீனத்துவ காலத்துக்குப் பிந்தைய கருத்தாக்கங்களை கொண்டவராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார், ருஷ்டி. உலகளவில் எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்காக பாடுபட்டு வந்தார். இதற்காக அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் PEN – International Association of Poets, Playwrights, Editors, Essayists, and Novelists என்னும் அமைப்பின் தலைவராகவும் ருஷ்டி செயல்பட்டார்.
ருஷ்டியின் ஐந்தாவது நூல் ‘The Satanic Verses’ (சாத்தானின் வசனங்கள்) 1988ஆம் ஆண்டு வெளியானது. அதுவரை அமைதியாக சென்றுகொண்டிருந்த ருஷ்டி வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. ‘சாத்தானின் வசனங்கள்’ நாவல் இஸ்லாத்தை அவமதிப்பதாக சில முஸ்லீம் அமைப்புகள் தெரிவித்தன. இந்நாவலில் பாலியல் தொழில் செய்யும் இரு பெண்களுக்கு முகமது நபியின் மனைவிகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டதை கண்டித்தனர். மேலும், ‘சாத்தானின் வசனங்கள்’ என்ற தலைப்பு, குரானில் இருந்து முகமது நபியால் நீக்கப்பட்ட இரண்டு வசனங்களைக் குறிப்பிடுகிறது என்றும், அவ்விரு வசனங்களும் பிசாசினால் தரப்பட்டவை என்று முகமது நம்பியதாகக் கருதப்படுகிறது என்றும் விமர்சனங்கள் வெளியானது.
இந்தியாதான் முதன்முதலில் இந்த நாவலை 1988 ஆகஸ்ட் 5ஆம் தேதி, முஸ்லிம் சமுதாயத்தினரை அவமதிப்பதாக கூறி தடை செய்தது. அதேநேரம், ‘ருஷ்டி எழுதிய இந்நூலின் கலை இலக்கியத் தகுதியை இத்தடை உத்தரவு எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை’ என்றும் அந்த உத்தரவிலேயே கூறப்பட்டிருந்தது. இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் இந்நுலை தடை செய்தன.
தன் மீதான மத விரோத குற்றச்சாட்டுகளை நிராகரித்த ருஷ்டி, ‘ஒரு கவிதையால் துப்பாக்கிக் குண்டைத் தடுத்து நிறுத்த முடியாது; ஒரு புதினத்தால் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய இயலாது; ஆனாலும் நாம் நாதியற்றவர்கள் அல்ல; நம்மால் உண்மையைப் பாட முடியும்; பொய்யர்களை அடையாளம் காட்ட இயலும்” என்றார்.
‘சாத்தானின் வசனங்கள்’ வெளிவந்து சரியாக ஒரு வருடம் கழித்து, இரானின் மூத்த மத குருவாக அப்போது இருந்த ஆயடூலா ருஹோல்லா கொமனேயி, சல்மான் ருஷ்டியை கொல்லுமாறு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்தார். சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு 30 லட்சம் டாலர்களுக்கும் அதிகமான வெகுமதி தரப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இஸ்லாமியர்கள் இந்நாவலுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள்.
பிரிட்டனில் சில முஸ்லிம் தலைவர்கள் பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்தினர். ருஷ்டி மீதான கொலை மிரட்டல்களுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், பெரும்பான்மை இஸ்லாமியர்கள் இரான் மதத் தலைவர் ஆயடூலா ருஹோல்லா கொமனேயிவையே ஆதரித்தனர்.
1989 ஜனவரியில் பிரிட்டனின் பிராட்ஃபோர்டில் நடைபெற்ற போராட்டத்தில் முஸ்லிம்கள் இந்நூலின் நகலை எரித்தனர். ருஷ்டியை போலவே நூலை விற்பனை செய்தவர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. கடைகளில் ருஷ்டி நூல்களை வைப்பதை தடுத்து நிறுத்தினர். இந்த நாவலை வெளியிட்ட நார்வே நாட்டைச் சேர்ந்தவரைக் கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜப்பானில் மொழிபெயர்த்தவர் கொல்லப்பட்டார். ருஷ்டிக்கு எதிராக நடந்த கலவரங்களில் 12க்கும் மேற்பட்ட மக்களும் கொல்லப்பட்டனர். இரான் தலைநகர் தெஹ்ரானில் பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டது.
எதிர்ப்புகள் வலுக்கவே, இஸ்லாமியர்களுக்கு ஏற்படுத்திய துயரத்துக்காக ருஷ்டி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். ஆனாலும், ருஷ்டிக்கு எதிரான பத்வாவை கோமேனியி திரும்ப பெறவில்லை. இதனால், அதன்பிறகு ருஷ்டி தனது மனைவியுடன் காவல்துறை பாதுகாப்புடன் தலைமறைவாக வாழத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பே ருஷ்டி வெளியே வந்து பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார். அவருக்கு பிரிட்டன் காவல்துறை பாதுகாப்பு கொடுத்து வந்தது.
இதனையடுத்து, 2007ஆம் ஆண்டில் இந்தியாவின் ராஜஸ்தானில் நடைபெற்ற ஜெய்பூர் இலக்கிய விழாவில், சல்மான் ருஷ்டி கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இந்தியாவில் அவருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக மாநில காவல்துறை கேட்டுக்கொண்டதை அடுத்து தமது பயணத்தை கைவிட்டார்.
எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருக்க எழுத்துலகில் ‘சாத்தானின் வசனங்கள்’ நாவல் பாரட்டப்பட்டது. நாவல்களுக்கு வழங்கப்படும் ‘விட்பிரெட்’ பரிசைப் பெற்றது. 2007இல் பிரிட்டிஷ் அரசி சல்மான் ருஷ்டியின் இலக்கிய சேவைக்காக ‘நைட் பேச்சிலர்’ என்ற சர் பட்டம் வழங்கி கெளரவித்தார். 2008இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் ருஷ்டி உறுப்பினராக தேர்வானார். டைம்ஸ் இதழ் 1945க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் பட்டியலில் ருஷ்டிக்கு 13ஆவது இடத்தை வழங்கியது.
ருஷ்டியும் நாவலும் பிரபலமாக எதிர்ப்பும் கடுமையாக அதிகரித்தது. 2012இல் ருஷ்டியை கொலை செய்பவருக்கு 30 லட்சம் டாலருடன் மேலும் 5 லட்சம் டாலர் பணம் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த கடுமையான எதிர்ப்புகள் காரணமாகவே, ருஷ்டிக்கு நோபல் பரிசு வழங்கத் தீர்மானித்திருந்த நோபல் கமிட்டி கூட, பின்னர் பின் வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
தற்போது75 வயதாகும் சல்மான் ருஷ்டி, 12 ஆகஸ்ட் 2022 அன்று காலை 11.00 மணி அளவில் அமெரிக்காவில் நியுயார்க் நகரில் ஷட்டாக்குவா என்னும் ஏரிக்கரையில் உள்ள ‘ஷட்டாக்குவா’ கல்வி நிறுவனத்தால் நடத்தப்பட்ட கோடைகால விரிவுரைத் தொடர் நிகழ்வில் முதல் பேச்சாளராக உரையாற்றினார். அப்போது பார்வையாளர்களில் ஒருவர் திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டி கழுத்தின் வலது பக்கம் உட்பட பல இடங்களில் மாறிமாறி குத்தினார். உடனே ரத்தம் பீறிட ருஷ்டி சரிந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மருத்துவர் ரீடா லிண்ட்மேன் என்பவர் ருஷ்டிக்கு முதலுதவிகள் செய்தார். அருகே இருந்தவர்கள், “அவருக்கு நாடித் துடிப்பு உள்ளது” என்று குரல் கொடுக்க, அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் உடனே ஹெலிகாப்டர் மூலம் ருஷ்டியை மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்.
ருஷ்டிக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பேச முடியாவிட்டாலும் ருஷ்டி நலமுடன் இருப்பதாகவும், “அவர் ஒரு கண்ணை இழக்கக்கூடும். கையில் உள்ள நரம்புகள் அறுபட்டிருக்கின்றன. கல்லீரல் சேதமடைந்திருக்கிறது” என அவரது ஏஜென்ட் ஆண்ட்ரூ வெஸ்லி கூறியுள்ளார்.
பொதுவாகவே ருஷ்டி காவலர்கள் சூழவே வெளியே வருவார். இந்நிலையில், அமெரிக்காவிலேயே அவர் தாக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. சல்மான் ருஷ்டியை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஹாதி மட்டார், நியூஜெர்சியில் வசிப்பவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேடையில், சல்மான் ருஷ்டியை மட்டுமல்லாமல் அவரைப் பேட்டி எடுத்த நபரையும் ஹாதி மட்டார் கத்தியால் குத்தியுள்ளார். பேட்டி எடுத்தவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.