கிராமத்தில் இருந்து, சென்னைக்கு வந்து கால் சென்டரில் வேலை பார்க்கும் ஹீரோ சத்யா, பணத்தேவைக்காக, தனது காதலிக்காக, ‘செயின்’ பறிப்பு வேலையை செய்கிறார். அதில் பணம் கொட்ட, சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். அந்த நகையை விற்கும் கொள்ளை கும்பலுக்கும், சத்யாவுக்கும் பிரச்னை வருகிறது. சத்யாவால் தனது மகளை இழந்த ஜெயபிரகாஷ் அவரை தேடுகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பது எஸ்.எம்.பாண்டி இயக்கத்தில் உருவான ராபர் கதை. எஸ்.கவிதா தயாரித்துள்ளார்.
நாம் அடிக்கடி கேள்விப்படும், பேப்பரில் படிக்கும் செயின் பறிப்பு சம்பவங்களின் பின்னணியில், பக்கா விரிவான திரைக்கதையில் உருவாகி இருக்கிறது ராபர். மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த், பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை எழுதியிருக்கிறார். சென்னையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான சிசிடிவி கேமரா இருந்தாலும், கேமரா இல்லாத இடங்களில் திட்டமிட்டு ஹீரோ எப்படி ஸ்கெட்ச் போடுகிறார். தனியாக செல்லும், டூ வீலரில் செல்லும் பெண்களை குறி வைத்து எப்படி நகையை அடிக்கிறார் என்பதை விரிவாக, விளக்கமாக சொல்கிறது கதை
அப்பாவியாக, கிளைமாக்சில் வேறொரு முகத்தை காண்பிப்பவராக நன்றாக நடித்து இருக்கிறார் சத்யா. மகளை பறி கொடுத்த அன்புள்ள அப்பாவாக ஜெயபிரகாஷ் அழுத்தமான நடிப்பை தந்து இருக்கிறார். நல்ல போலீஸ்காரராக ராஜாராணி பாண்டியனும் மனதில் நிற்கிறார். இவர்களை தவிர, வில்லனாக வரும் டேனி, ஜெயிலில் இந்த கதையை விவரிக்கும் சென்ட்ராயன் ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள். ஹீரோ அம்மாவாக வரும் தீபா நடிப்பும், கிளைமாக்சில் அவர் உக்கிரமும் செம.
ஐடி பெண்களை தவறாக காண்பித்து இருப்பதை ஏற்க முடியவில்லை. அதேபோல், மெட்ரோ படத்தின் சாயல் சில இடங்களில் இருப்பதையும் தவிர்த்து இருக்கலாம்.
ஜெயிலில் தொடங்கி, ஜெயிலில் முடிகிற கதை, அதை சொல்லும் பாணி, பல நடிகர்களின் சினிமாத்தனம் இல்லாத நடிப்பு, நகை பறிப்பு சம்பந்தப்பட்ட திக்திக் சம்பவங்கள் ஆகியவை படத்துக்கு பலம். நகை பறிப்பு சம்பவங்களை, அதன் பின்னணியில் இருக்கும் கும்பலை, அவர்களின் பிஸினஸ், ரவுடியிசத்தை ராபர் அளவுக்கு எந்த படமும் விவரிக்கவில்லை. தெருவில் பறிக்கப்படும் நகை எப்படி கை மாறுகிறது. அந்த கும்பல் எப்படிப்பட்ட நெட் வொர்க்குடன் செயல்படுகிறது. எந்த ஏரியாவில், எப்படி செல்லும் பெ ண்களில் நகையை பறிக்கிறார்கள் என்பதை விலாவரியாக சொல்லி, நம்மை பயமுறத்துகிறது பல சீன்கள்.