பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்து மதத்தில் இருந்து வேறு மதம் மாறியவர்கள் பட்டியலின சாதிகளில் இணைய முடியாது. ஆனால், சீக்கியம் மற்றும் பவுத்த மதம் மாறியவர்களை பட்டியலின சாதிப்பட்டியலில் சேர்த்து முறையே 1956, 1990 ஆண்டுகளில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது; இதே போன்ற திருத்தம்தான் கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கின்றனர். வரலாற்று ரீதியாகவே ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமையை வழங்குவதே சரியானது.
மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் ஜாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. ஜாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே ஜாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம். ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை கொடுமை தொடர்கிறது. சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும்” என்றார்.
சென்னையில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்
சென்னை பாரிமுனையில் அரண்மனை 4வது தெருவில் 4 மாடி கட்டடம் ஒன்று புதுப்பித்தல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடிந்து விழுந்துள்ளது. கட்டட இடிபாடுகள் 5 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வண்டிகளில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புல்டோசர் நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாதுகாப்பு நலன் கருதி கட்டட விபத்து நடந்த இடத்தைச் சுற்றி இருக்கும் பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இயல்பைவிட அதிக வெயில்: ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
இந்தியாவில் இந்த ஆண்டு வெயில் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய தொழிலாளர் துறை செயலாளர் ஆர்த்தி அகுஜா எழுதிய கடிதத்தில், “வெப்ப அலையின் தாக்கத்தால் தொழிலாளர்களும் ஊழியர்களும் பாதிக்கப்படாத வகையில் உரிய முன்னேற்பாடுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிறுவன உரிமையாளர்கள் ஆகியோருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்கலாம். பணியிடங்களில் போதிய குடிநீர் வசதிகள் இருப்பது அவசியம். கட்டுமான தொழிலாளர்களுக்கு வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான உபகரணங்களையும், ஐஸ் பேக்குகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முழு சூரிய கிரகணம்
150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. இந்த அரிய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நாளை நடக்கிறது.
இது குறித்து முதன்மை விஞ்ஞானி எபினேசர், “நாளை (20ந் தேதி) நடக்கும் பூரண சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் வானியற்பியல் விஞ்ஞானிகள் மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அடுத்த முழு சூரிய கிரகணம் 2172-ம் ஆண்டுதான் வரும். எனவே பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை கண்டு கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.