கொரோனா பாதிப்புக்கு பிறகு சர்வதேச அளவில் மக்களிடையே வேலை பார்க்கும் பழக்கம் மாறி வருகிறது. முன்பெல்லாம் சம்பளத்துக்காக மக்கள் வேலை பார்த்தார்கள். கூடுதல் பணம் வருமென்றால் அதற்காக மணிக்கணக்கில் ஓடி பார்க்கக்கூட தயாராக இருந்தார்கள். ஆனால் கொரோனாவுக்குப் பிறகு காலம் மாறிவிட்டது. சம்பளம் மட்டுமே வாழ்க்கையில்லை என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். சம்பளத்தைத் தவிர வீட்டில் இருந்து வேலை பார்ப்பது, குறைந்த வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.
Indeed என்ற வேலைவாய்ப்பு சார்ந்த நிறுவனம், சர்வதேச அளவில் மக்களின் வேலை பார்க்கும் மனநிலையைப் பற்றிய ஆய்வை சமீபத்தில் நடத்தியுள்ளது. வேலை தேடிக் கொண்டிருக்கும் சுமார் 1,200 பேரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு இந்த ஆய்வை Indeed நிறுவனம் நடத்தியுள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் தெரியவந்துள்ளன.
புதிதாக வேலை தேடும் இளைஞர்களில் 71 சதவீதம் பேர் சம்பளத்தைவிட வேலையில் உள்ள சொகுசுகளை விரும்புவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சம்பளத்தைவிட வீட்டில் இருந்து வேலை பார்ப்பது, குறைந்த வேலை நேரம், ஹெல்த் இன்ஷூரன்ஸ் போன்ற விஷயங்களுக்கே அவர்கள் அதிக முன்னுரிமை தருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த சொகுசுகளுக்காக குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்களாம்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 70 சதவீதம் பேர் ஆபீசுக்கு செல்வதைவிட வீட்டில் இருந்து பணியாற்றுவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 67 சதவீதம் பேர் மட்டுமே சம்பளத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
வேலை தேடுபவர்களின் தேர்வு, வீட்டில் இருந்து பணியாற்றுவதாக இருக்க, வேலை கொடுக்கும் நிறுவன்ங்கள் அதை ஏற்பதாக இல்லை. 6.5 சதவீத நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை ஆதரிக்கின்றன. வீட்டில் இருந்து வேலை பார்ப்பதைவிட தொழிலாளர்கள் ஆபீசுக்கு வந்து வேலை பார்ப்பதால் அவர்களின் வேலைத் திறனும், கூட்டு முயற்சியும் அதிகரிப்பதாக நிறுவனங்கள் கருதுகின்றன.