பிரசாத்முருகன் இயக்கும் ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்’ படத்தில் கதைநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார் பரத். ஒரு துப்பாக்கி, நான்று மாறுபட்ட சூழ்நிலைகளில் இருப்பவர்களின் கைகளில் கிடைக்கிறது. அவர்கள் எத்தனைபேரை சுட்டார்கள், ஏன் சுட்டார்கள் என்பது கதை. கிட்னி மாற்று சிகிச்சைக்காக போராடும் தனது மனைவியை கைப்பாற்ற போராடுகிறார் பரத். 50லட்சம் பணத்துக்காக அலைகிறார்கள். பணம் கிடைத்ததா? மனைவியை காப்பாற்றினாரா என்பது பரத் சம்பந்தப்பட்ட போர்ஷன். திருநங்கை மகளுக்காக போராடும் துப்புரவு தொழிலாளி அபிராமி, சாதி வெறி பிடித்த அப்பாவுடன் சண்டைபோடும் மகள் பவித்ரா, தவறான நபரை திருமணம் செய்து டார்ச்சர் அனுபவிக்கும் இளம் மனைவி அஞ்சலிநாயர் ஆகியவை மற்ற 3 கதைகள்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய பரத் ‘‘மாறுபட்ட கதைகளில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. இந்த கதை அப்படிப்பட்டது. மாநகரம் படம் மாதிரி இருக்கிறது என்று படம் பார்த்தவர்கள் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கமான கதைகள் இப்ப ஓடுவது இல்லை. ஓடிடிக்காக இந்த கதையை ஆரம்பித்தோம். பின்னர் கதை நன்றாக இருந்ததால் தியேட்டருக்கான படமாக மாற்றினோம். சென்சாரில் இந்த படம் சிக்கியது. கடைசியில் ஏ சான்றிதழ்தான் கிடைத்தது. என்னுடைய நேபாளி படத்திலும் சென்சார் பிரச்னைகளை சந்தித்தேன். அந்த படத்தில் பல காட்சிகளை நீக்க சொன்னார்கள். அதை செய்தபின்னரும் ஏ சான்றிதழ்தான் கொடுத்தார்கள். யார் படம் பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து சென்சார் சான்றிதழ் மாறும். இந்த படத்தில் சோஷியல் மெசேஜ் இருக்கிறது.
அதனால், யு ஏ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை. இந்த கதையில் வழக்கமான ஹீரோ, நாலு பைட், காமெடி என இருக்காது. இதுல கன்டன்ட் பேசப்படும். அவ்வப்போது ஹீரோயிச கதையிலும் நடிக்கிறேன். அது கமர்ஷியல், வெற்றிக்காக’’ என்றவரிடம், ‘‘நீங்களும், சித்தார்த்தும் பாய்ஸ் படத்தில் அறிமுகம் ஆனீர்கள். இந்த படமும், சித்தார்த் நடித்த மிஸ் யூ படமும் டிசம்பர் 13ல் வருகிறது. இந்த போட்டியை எப்படி பார்க்கிறீர்கள்’’ என்று கேட்க, ‘‘இது எனக்கு பதில் சொல்ல. சித்தார்த்துக்கு வாழ்த்துகள் நண்பா என சொல்கிறேன். இரண்டு படங்களும் வரட்டும். நல்ல படங்கள் ஓட வேண்டும்’’ என்று சிரித்தார். வில்லனாக நடிப்பீர்களா என கேட்கப்பட, ‘‘கண்டிப்பாக, வில்லன் வேடத்தில் நடிப்பேன். அஜித்சார் படத்துல அருண்விஜய் நடித்தார். அந்த மாதிரி கதைகள் கிடைத்தால் நடிக்க ரெடி. சாதாரண வில்லனாக, ஏனோ, தானோ என பண்ணக்கூடாது என நினைக்கிறேன். வில்லன் கேரக்டருக்கு பவர் அதிகம். நன்றாக நடிக்கலாம் என்று விஜய்சேதுபதி கூட சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக்கொள்கிறேன். இந்த படத்தின் பார்ட்2 கூட இருக்கிறது’’ என்றார்.