விஜய் டிவியில் இருந்து சந்தானம், யோகிபாபு, மா.க.பா.ஆனந்த், கவின்,ரியோ, ராஜூ, புகழ் உட்பட பலர், சினிமாவுக்கு வந்து ஹீரோ ஆகியிருக்கிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவி ராமரும் ‘அது வாங்குனா இது இலவசம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆகிறார். எஸ்.கே. செந்தில் ராஜன் இயக்கும் இந்த படத்தில் பூஜாஸ்ரீ ஹீரோயின். கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி உட்பட பலர் நடிக்கிறார்கள். விளம்பரம், குறும்படங்கள் மற்றும் இசை ஆல்பங்கள் இயக்கியவர் இந்த பட இயக்குனர்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில் ‘‘படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி தப்பு பண்ணினால் தண்டனை நிச்சயம் உண்டு என்கிற கருத்தை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த திரைக்கதையாக படம் உருவாகி உள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அதனால் என்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதை இதில் கமர்ஷியலாக சொல்கிறோம். இதுவரை பார்க்காத ஒரு ராமரை இந்த படத்தில் பார்க்கலாம். படத்திற்குப் பிறகு நிச்சயம் வடிவேலு போல மிகப்பெரிய அளவில் பேசப்படுவர்” என்கிறார்.
படத்தில் ஒரு பாடலை முழுக்க மழையில் நனைந்தபடி கமர்ஷியலாக படமாக்கி இருக்கிறார்களாம். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு சீசன் 10’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகை நமீதா வெளியிட்டார். பிப்ரவரி 14ல் படம் ரிலீஸ்.