ஒரு காலத்தில் சிவா, ரங்கீலா, கம்பெனி, ரக்த சரித்திரா போன்ற கமர்ஷியல், ஆக் ஷன் படங்களை இயக்கிய வந்த ராம் கோபால் வர்மா, ஒரு கட்டத்தில் கவர்ச்சி பாதைக்கு திரும்பினார். அந்த வகையில் ‘சாரி’ என்ற படத்தை உருவாக்கி உள்ளார். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் இந்த படம் உருவாகிறது. சத்யா, ஆராத்யா தேவி ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
படம் குறித்து ராம்கோபால்வர்மா கூறுகையில் “சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவது வாழ்க்கையில் மோசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். அதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ’சாரி’. இந்தப் படத்திற்கான கதையை நான் எழுதியுள்ளேன். கிரி கிருஷ்ணா இயக்கியுள்ளார். உண்மையை சொன்னால், நான் எழுதிய ஸ்கிரிப்டை விட இயக்குநர் சிறப்பாக படத்தை உருவாக்கியுள்ளார். அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். இந்தப் படம் பற்றி நான் அவருடன் விவாதித்தபோது, அவர் சொல்லிய கருத்துகளும் எனக்குப் பிடித்திருந்ததால் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கு வழங்கினேன். ஒளிப்பதிவாளர் சபரி, இசையமைப்பாளர் சஷிப்ரீதம் மற்றும் எனது முழு அணியினரும் படத்தில் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையிலான கதைக்களத்தில் படம் நகர்கிறது.
என் படங்கள் அனைத்திலும் சமூகத்திற்கான ஒரு விஷயம் இருந்து கொண்டே இருக்கும். சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலம் இது. பேஸ் புக் போன்ற ஊடகங்களால் ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் பாதிக்க படுகிறார்கள். முக நூல் நட்பால் ஒரு சைக்கோ விடம் மாட்டி கொள்ளும் ஒரு இளம் பெண் படும் பாட்டை சாரியில் சொல்லி இருக்கிறேன். இப்படி பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். படத்தின் கருவை சொல்லி விட்டேன். ஆனாலும், படம் பார்க்கும் போது உங்களுக்கு சுவாரசியம் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். சாரி என்பது சேலையை குறிக்கிறது”
சோஷியல் மீடியாவில் நான் ஆக் டிவ் ஆக இருப்பேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய டுவிட்டர் பதிவுகள் காரணமாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு என்னை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. ஆனால் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் என்னை போனில் அழைத்தார். உன்னை கைது செய்வதற்காக வருகிறார்கள். சட்டப்படி என்பதால் மோசமாக நடந்து கொள்ளாதே என்று கூறினார். உடனே, என்னுடைய வழக்கறிஞர்கள் குழுவுடன் இதுபற்றி விவாதித்தேன். என் மீது பதியப்பட்ட வழக்கில் புதிய சட்ட விதிகளின்படி வழக்கு பதிய முடியாது, கைது செய்ய முடியாது என அவர்கள் விளக்கினர்.