ராஜ்நாத் சிங்கின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் முன்னிலையில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் துணைப் பிரதமர் மார்லெஸ் மற்றும் இரு தரப்பு மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினாா்.
இந்தியா-ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பின் விரைவான வளர்ச்சியை இரு தலைவர்களும் பாராட்டினர்.
இந்தியாவுடன் புதிதாக கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையிலான செயல்பாட்டு கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்று ரிச்சர்ட் மார்லெஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துதல், கடற்சாா் பாதுகாப்பு உறவுகள் விரிவாக்குதல் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பது குறித்து ராஜ்நாத் சிங் ரிச்சா்ட் மாா்லெஸுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கைப் பேணுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் விரைவான வளர்ச்சியையும், உலகளவில் உயர்தர பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் நம்பகமான ஆதாரமாக இந்தியா வளர்ந்து வருவதையும் எடுத்துரைத்ததாக ராஜ்நாத் சிங் கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பகிரப்பட்ட பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஆஸ்திரேலியாவின் உறுதியான ஆதரவிற்காக ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார்.