அ. இருதயராஜ்
ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி, திரையரங்கில் சென்று பார்த்து, அதுபற்றி பேசியும் எழுதியும் அனைவரும் ஓய்ந்துவிட்டார்கள். சமூக வலைதளப் பதிவுகளை வேறு ‘ட்ரண்ட்’கள் ஆக்கிரமித்துவிட்டன. இந்நிலையில், ‘ஜெயிலர்’ பற்றி ஒரு கட்டுரையா என்று கேள்வி எழலாம். இனியும் இந்த திரைப்படத்திற்குள் சென்று விமர்சிப்பதற்கு பெரியதாக ஒன்றுமில்லைதான். ஆனால், இந்த படத்திற்கு பின்னால் இருக்கிற அரசியல், திட்டமிட்ட வணிகம், சூப்பர் ஸ்டார் போட்டி, வெற்றி பார்முலா என்பதை பற்றியெல்லாம் நாம் பேச வேண்டிய தேவை இருக்கின்றது.
ஜெயிலராக இருந்து ஓய்வு பெற்ற முத்துவேல் பாண்டியன் (ரஜினி) தன்னுடைய மனைவி, மகன், மருமகள், பேரப் பிள்ளையோடு அமைதியாக வாழ்ந்து வருகின்றார். இந்த சூழலிலும், அவரது குடும்பத்தை பழிவாங்க துடிக்கின்றார் வில்லன். இதனால், அவரது குழுவை தேடித்தேடி நூதன முறையில் தீர்த்து கட்டுகிறார்.
படத்தில் வில்லனாக வரும் மலையாள நடிகர் விநாயகம் சிலை கடத்தல் கும்பலின் தலைவராக இருக்கின்றார். கோயில்களில் சிலை திருடுவதையும் திருடிய சிலைகளை பாதுகாப்பதில் தொந்தரவாக இருப்பவர்களை கொடூரமாக கொல்வதையும் தன்னுடைய வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
கதாநாயகனுக்கும் (ரஜினி) வில்லனுக்கும் (விநாயகம்) நடக்கின்ற மோதலும் அவர்கள் மாறி மாறிச் செய்கின்ற கொலைகளும்தான் மொத்த படம்.
ஒரு ஜெயிலராக இருந்து ஓய்வு பெற்ற முத்துவேல் பாண்டியன், தன்னுடைய குடும்பத்தினருடன் அமைதியான சூழலில் வாழ்ந்தாலும், அவருக்குள் அவ்வளவு வன்முறை குடி கொண்டிருக்கிறது. தன்னுடைய பேரனை கொல்ல வந்த இரண்டு நபர்களை தலைவேறு, முண்டம் வேறு என்ற நிலையிலே கழுத்தை அறுத்து போடுகின்றார். மருமகளை அசிங்கமாக பேசியதற்காக இன்னொருவனை மிகவும் கொடூரமான முறையிலே கொல்லுகின்றார். பிளாஷ்பேக்கில் அவரை எதிர்த்து பேசியதாலயே ஒருவனுடைய காதை அறுக்கின்றார். அறுத்த காதை கையில வைத்துக்கொண்டு வசனம் பேசுகின்றார். இவ்வளவு கொடூரமாக மற்றவர்களை கொல்கின்ற மனிதன், எப்படி மென்மையான நபராக குடும்பத்திற்குள் வலம் வருகின்றார்?
திரைப்படம் என்பது நல்ல பொழுதுபோக்கு சாதனம், சமூக மாற்றத்திற்கான கருவி, மக்களை பண்படுவதற்கான ஊடகம் என்பதையெல்லாம் கடந்து, வியாபாரம் மட்டுமே என்கின்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது. ஸ்டார் அந்தஸ்துள்ள நடிகர்களின் திரைப்படம் வெளியாகின்ற தேதியை குறித்த உடனேயே, குறிப்பிட்ட நாட்களில், அனைத்து திரையரங்குகளிலும் அந்தப் படம் மட்டும்தான் ஓடுகின்ற சூழல் உருவாக்கப்படுகிறது. எனவே, திரையரங்கு வளாகத்திற்குள் வருகின்ற ஒரு சினிமா பார்வையாளன், அவன் விரும்பிய படம் பார்ப்பதற்கு பதிலாக, அங்கு இருக்கின்ற படத்தை மட்டுமே பார்ப்பதற்காக கட்டாயப்படுத்தபடுகிறான். இது சமீப கால நவீன வியாபார யுக்தி. இதனால், ஒரு நல்ல படத்தை தேர்ந்தெடுத்து பார்ப்பதற்கும் மிக மோசமான படத்தை நிராகரிப்பதற்குமான வாய்ப்பு பார்வையாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. இப்படித்தான் ‘ஜெயிலர்’ உட்பட முன்னணி நட்சத்திரங்களின் படத்திற்கு வசூல் குவிக்கப்படுகிறது.
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலேயும் இப்படம் வெளியாகின்றது. அந்தந்த மொழி பேசும் மக்களை கவர்வதற்காக, அந்தந்த மொழிகளில் பிரசித்தி பெற்ற நடிகர்களை ஊறுகாய் போல இந்த படத்திலே பயன்படுத்தி இருக்கிறார்கள். தமிழ் மக்களை கவர்வதற்கு ரஜினி இருக்கிறார். அவருடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் இணைந்துள்ளார். மலையாள ரசிகர்களை கவர்வதற்காக மோகன்லால், விநாயகம்; கன்னட நடிகர்களை கவர்வதற்காக நடிகர் ராஜ்குமாரின் மகனான சிவராஜ் குமார், ஹிந்தி ரசிகர்களை கவர்வதற்காக ஜாபர் ஷரீப், தெலுங்கில் சுனில் ரெட்டி. இது வணிக ரீதியாக அம்மொழிகளில் இப்படத்தை வெற்றி பெற வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. எப்படிப்பட்ட மோசமான கதையையும் ஒரு கதாநாயகப் பிம்பத்தின் பின்னணியில் வெற்றி படமாக மாற்றி விடலாம் என்ற கணக்கு.
‘ஜெயிலர்’ திரைப்படத்தின் திரையரங்க வசூல் மட்டும் இதுவரை 500 கோடிக்கும் மேல் என்று சொல்கிறார்கள். படத் தயாரிப்பு செலவு 250 கோடி என்றால் 250 கோடி லாபம். படத்தை ஓடிடி தளங்களுக்கு விற்கின்ற பொழுது இன்னும் நூறு கோடி பணம் கிடைக்கும். தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்கின்றபொழுது அதிலே 50 கோடி கிடைக்கும்.
இந்த வியாபார வெற்றிக்குப் பின்னால், மேலே குறிப்பிட்டவற்றுடன் ‘யார் சூப்பர் ஸ்டார்’ என்று எழுப்பப்பட்ட போலி விவாதத்துக்கும் முக்கிய பங்கிருக்கிறது. ‘ஜெயிலர்’ படத்தில் வருகின்ற தொடக்கப் பாடலில், ‘நான்தான் இங்க கிங்கு. நான் வச்சதுதான் ரூல்ஸ். அந்த ரூல்ஸ நான் நெனச்ச நேரத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன். அதைக் கேட்டு ஒழுங்கா நடந்தா இங்கே இருக்கணும். இல்லாட்டி உங்களை கிழிச்சு போட்டுருவேன். தலைவர் தான் களத்துல எப்போதும் சூப்பர் ஸ்டார். தலைவர் நிரந்தரம்” என்ற வரிகளை கேட்டிருப்போம்.
சரி, ரஜினி உண்மையான சூப்பர் ஸ்டார் ஆக இருக்கட்டும்; அல்லது தலைவராக இருக்க விரும்பட்டும். அப்படி தன்னை நினைத்துக்கொள்பவர் இதுவரை தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கின்றார்? தமிழ் சமூகத்தின் ஏற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் எத்தகைய முன்னெடுப்புகளை செய்திருக்கின்றார்?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் துப்பாக்கிச் சூட்டையும் பல உயிரிழப்புகளையும் சந்தித்தபோது, மருத்துவமனையில் குற்றுயிராய் படுத்திருந்த பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து, “இங்கே சமூக விரோதிகள் இருப்பதால்தான் இத்தகைய வன்முறை ஏற்பட்டது” என்று சொன்னார். யாரை சமூக விரோதி என்று சொல்லுகிறார் என்று கேட்ட விசாரணை அதிகாரியிடம், “எனக்கு தெரியாது” என்று பதில் சொன்னார்.
திரைப்பட வசனங்கள், பாடல் வரிகள் மூலமாக நான் அரசியலுக்கு வரப்போகிறேன், வந்துவிட்டேன் என்றெல்லாம் சொல்லி வருடக்கணக்காக ரசிகர்களை உசிப்பேற்றியவர், குறிப்பிட்ட காலக்கெடு நெருங்கியதும், நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டார். அதனால், சோர்ந்துவிட்ட ரசிகர்களை உற்சாகப்படுத்த இப்பொழுது ‘சூப்பர் ஸ்டார் யார்’ என்ற போலி விவாதத்தை முன்னெடுக்கிறார்.
‘ஜெயிலர்’ படம் திரையரங்கில் வெளியானதற்கு மறுநாள் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதாக சொல்லிவிட்டு சென்றார் ரஜினி. ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை, சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம் என பல இடங்களுக்கு சென்றார். இப்பயணத்தில் ஒரு ஆன்மீக உரையையும் நிகழ்த்தி இருக்கின்றார். இதனிடையே, ரஜினிகாந்தை பார்ப்பதற்காகவே தமிழ்நாட்டில் இருந்து இமய மலைக்கு இரண்டு மாதங்களாக நடந்தேவந்த (!) வந்த ஒரு ரசிகனை இருகணைத்து புகைப்படம் எடுத்துகொண்டார். அவரை பாராட்டினார். இந்த ரசிகன் பயணம் உட்பட ரஜினியின் ஆன்மிக பயணம், ஒவ்வொரு நாளும் செய்தியாக வெளிவந்து கொண்டே இருந்தது. இந்தியாவெங்கும் ‘ஜெயிலர்’ படம் ஓடிக் கொண்டிருக்கின்ற தருணத்திலே இந்த செய்திகள் எல்லாம் வருவது அந்தப் படத்தை பிரபலப்படுத்துவதற்கு உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினி குறித்தும் ‘ஜெயிலர்’ படம் குறித்தும் ஓர் உரையாடலை வெகுஜன தளத்திலே தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு இந்த செய்திகளும் காரணமாக இருந்தன. ஆம், ‘ஜெயிலர்’ படம் பார்ப்பதற்கு மீண்டும் மீண்டும் மக்களை அழைப்பதற்கும் அதன் மூலம் வசூலை குவிப்பதற்கும் ரஜினியின் ஆன்மீகப் பயணம் குறித்த செய்திகள் பெருமளவுக்கு உதவின. படத்தை திரையரங்கில் சென்று பார்க்கமாட்டேன், ஓடிடி தளத்தில் வெளியாகும்போது பார்த்துக்கொள்கிறேன் என்று நினைக்கின்ற ஒரு சாதாரண மனிதன் கூட, சரி அப்படி இந்த படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிட திரையரங்குக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த செய்திகள் ஏற்படுத்தின.
படம் முழுவதும் வன்முறையை விதைத்துவிட்டு, காட்சிக்கு காட்சி ரத்தம் சொட்ட சொட்ட கொலை செய்துவிட்டு, எதற்கு இந்த ஆன்மீகப் பயணம்? ஆன்மீகம் ஒரு வாழ்க்கை நெறி என்றால், அதை திரைக்குள்ளும் திரைக்கு வெளியிலும் கடைபிடிப்பவன் தான் ஒரு நல்ல கலைஞன். ஆனால், ரஜினி, திரைப்படத்திற்குள் வன்முறையை ஆதரிப்பேன்; வெளியிலே ஆன்மீக பயணம் என்று நாடகம் போடுவேன் என்பதாக இருக்கிறார்.
சரி, ஆன்மீக தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டதை கூட ஏதோ ஒரு வகையில் புரிந்துகொள்ளலாம். இந்த பயணத்தில் ரஜினியும் லதா ரஜினிகாந்தும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சென்று பார்த்ததோடு அவருடைய காலில் விழுந்து வணங்கியதையும் எப்படி புரிந்துகொள்வது?
யோகி பின்னணி குறித்தும் அவருடைய மாநிலத்தில் தலித் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் சிறுபான்மையினருக்கும் எத்தகைய அச்சுறுத்தல் இருந்திருக்கின்றது என்பது குறித்தும் ரஜினிகாந்த அறிவாரா? அந்த மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் காலத்தில் எவ்வளவு வன்முறைகள் நடந்திருக்கின்றன? மதவாதம் என்ற பெயரிலும், சாதிய கௌரவம் என்ற பெயரிலும் எத்தனை எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன? இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எவ்வளவு தூரம் தாக்கப்பட்டு இருக்கின்றார்கள்? மாட்டு கறி சாப்பிட்டதால் எத்தனை தலித் மக்களை அடித்தே கொன்றிருக்கிறார்கள்?
யோகி, காவி உடையில் உள்ள ஒரு சாமிஜி அல்ல, வன்முறையை மனதிற்குள்ளே கொண்டிருக்கின்ற மிகக் கொடூரமான ஒரு முதலமைச்சர். அரசியல் சாசனத்தின் படி இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்றாலும், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர் அந்த மத அடையாளத்தோடு அரசு பதவிகளில் இருக்க முடியும்; இங்கு நாங்கள் வைத்தது தான் சட்டம் என்பதை சொல்லாமல் சொல்லியவர் என்பதெல்லாம் ரஜினிக்கு தெரியாதா?
‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய ரஜினிகாந்த் இறுதியிலே, ”என்னிடம் குடிப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் நான் வேறு ஒரு ரஜினி ஆக இருந்திருப்பேன். இந்த சமூகத்திற்கு இன்னும் பல நல்ல காரியங்களை செய்திருப்பேன்” என்றார். இவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறதோ இல்லையோ இதுவரை தமிழ் சமூகத்திற்கு என்ன செய்திருக்கின்றார்?
தமிழ் திரைத்துறையில் ஏறக்குறைய 45 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற ரஜினிகாந்த், அத்துறை லாபம் ஈட்டி தருகின்ற மிகப்பெரிய சாதனம் என்பதை நன்கு அறிந்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதன் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தமிழ்நாட்டிற்கும் இந்த பரந்தபட்ட சமூகத்திற்கும் என்ன செய்திருக்கின்றார் என்பதற்கு பதிலில்லை. தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.
எனவே, ரஜினியின் வெற்று கோஷங்களை எல்லாம் கூர்மையாக விமர்சிக்க வேண்டியது அவசியம். அத்தகைய விமர்சனங்கள்தான், திரைத் துறையில் நல்ல கதைகளுக்கும் நல்ல இயக்குனர்களுக்குமான ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்கும். அதுதான் தமிழ் சினிமாவை தரமுள்ள சினிமாவாக மாற்றும். உலக அரங்கில் நல்ல திரைப்படங்களை எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
அ. இருதயராஜ், காட்சி தகவலியல் துறை பேராசிரியர்.