கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் விளம்பர பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு படத்தின் குழு கமல், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோரும் பயணித்து வருகிறார்கள். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கமல் பேசியது வைரலாகி வருகிறது. அங்கு திரைப்படம் குறித்து படிக்கும் மாணவர்கள் மத்தியில் பேசும்போது ரஜினிக்கும் தனக்குமான நட்பு பற்றி பேசியது பலரையும் கவர்ந்திருக்கிறது.
நானும் ரஜினியும் பல படங்களில் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்திருக்கிறோம். எங்களைப் போல் நட்பு கொண்டவர்கள் இனி சினிமாவில் யாரும் வர முடியாது. நாங்கள் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டது கிடையாது. இது நாங்கள் இருவரும் எங்களுடைய 20களில் செய்துகொண்ட ஒப்பந்தம் என்று பேசியிருக்கிறார்.
பொதுவாகவே கமல் ரஜினி இருவருக்குமான நட்பு என்பது ரஜினியின் முதல் படமான அபூர்வராகங்கள் திரைப்படத்திலிருந்தே தொடங்கி விட்டது. ரஜினி நடிக்க வந்தபோது கமல்ஹாசன் பரபரப்பான கதாநாயகனாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் ரஜினியை அவர் அரவனைத்துக் கொண்டதும் நட்பு கொண்டு பல திரைப்படங்களில் சேர்ந்து நடித்ததும் வரலாறு.
இருவரும் சேர்ந்து நடித்த பல படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்கள் பலரும் அதை ரசித்து கொண்டாடினார்கள். சில படங்களில் கமலுக்கு வில்லனாகவும் , தியாகம் செய்யும் கதாபாத்திரத்திலும் நடித்து ரஜினி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இருவருக்குமான ரசிகர்கள் சில இடங்களில் உற்சாக மிகுதியால் மோதிக் கொண்டார்கள். இதை ரஜினி – கமல் இருவருமே விரும்ப வில்லை.
இவர்கள் சேர்ந்து நடிக்கும் படங்களில் கமல்ஹாசனுக்கு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டது. ரஜினிக்கோ சொற்ப பணமே கிடைத்தது. இதனை ஒரு நாள் கமல்ஹாசன் தெரிந்து கொண்டு ரஜினியிடம் பேசியிருக்கிறார். அது நடந்த இடம் நினைத்தாலே இனிக்கும் படத்தின் படப்பிடிப்புத்தளம்.
கமல் ரஜினியிடம் நாம் இருவரும் சேர்ந்து நடிப்பதால் எனக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம் ஆனால் உனக்கு நஷ்டம்தான் வரும். சம்பளம் அதிகமாக கொடுக்க மாட்டார்கள் ரஜினி. அதனால் இனிமேல் நாம் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம். தனித்தனியாக நடித்து சம்பளத்தை அதிகமாக வாங்கலாம். அது உனக்கும் நல்லது அப்படி சேர்ந்து நடித்தால் அது நாம் இருவரில் ஒருவரது சொந்தப்படமாக இருக்க வேண்டும் என்று கமல் கூற, அதை ரஜினியும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இப்படி இருவரும் வெளிப்படையாக பேசிப் பிரிந்த பிறகு இருவர் படத்திற்கும் தனித்தனி வியாபாரம் கிடைத்தது.. ரஜினியின் சம்பளமும் உயரத்தொடங்கியது.
இப்படி அன்றிலிருந்து ரஜினி – கமல் நட்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு முறை கமல் ஒரு பேட்டியில், ::கமல் – ரஜினி என்று சொல்வதற்கு பதிலாக ரஜினி – கமல் என்று சொல்லப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா ?என்று கேட்டபோது , :அப்படி அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை; என்று கமல் கூறியிருக்கிறார்.
இன்னொரு நிகழ்ச்சியில் ரஜினியை வைத்துக் கொண்டே கமல் பேசும்போது , “எங்கள் திரைப்படங்கள் குறித்து நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வோம். அப்போது என்ன படம் செய்ய இருக்கிறார் என்பதை அவரும் நானும் கதையைக்கூட பகிர்ந்து கொள்வோம். எங்களுக்கு எந்த போட்டியும் இருந்ததில்லை. பொறாமை கூட உண்டு.
கதையை வித்தியாசமாக செய்வதில் தேடுதல் இருக்கும். ஒரு நாள் தான் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பை எனக்கு சொன்னார் ஒரு மேடையில் கூட்டத்தின் நடுவே எனக்கு காதில் மெதுவாக தலைப்பை எனக்கு கணபதி என்றார் நான் ஷாக் ஆகி என்ன கணபதியா நல்லாவேயில்லை என்றேன். ஆனால் ரஜினி கணபதி இல்ல தளபதி என்றார். என்னிடம்தான் தலைப்பை முதன் முதலில் சொன்னார். இப்படி நாங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் நல்ல நண்பர்களாகவே இருந்துள்ளோம் என்றார்.
தமிழ் சினிமாவில் ரஜினி – கமல் நட்பு என்பது ரொம்பவும் அபூர்வமான ஒன்றுதான். அவர்கள் நடபின் அடையாளாமாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ஒரு திரைப்படமும் தயாரிக்கும் திட்டமும் இருக்கிறது என்பதுதான் அடுத்த பரபரப்பு.
அது எப்போது என்பது ரஜினி – கமல் இருவருக்குமே வெளிச்சம்.