இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார். எப்படி அனைத்து திருடர்களும் ‘மோடி’ என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று அவர் கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தீர்ப்புக்கு முன்னதாக பலத்த பாதுகாப்புடன் ராகுல் காந்தி நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில், வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எச்எச் வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தார். தொடர்ந்து தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். உடனடியாக ராகுல் காந்தி பிணைக்கு முறையிட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 30 நாள்களுகுள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றம்
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார். அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மசோதா குறித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது குறித்து அறிவுரை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தோம். மாணவர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படுவதாக குழு அறிக்கை அளித்தது. தற்கொலையை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது” என்றார். இதை தொடர்ந்து சட்ட மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதானி குழும மோசடி போல் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம்: ஹிண்டன்பர்க் அறிவிப்பு
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி மாதம், “இந்தியாவில் செயல்படும் அதானி குழுமத்தை சேர்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வலுவாக காட்டுகிறது. பங்கு சந்தையை ஏமாற்றி லாபம் பார்க்கிறது. வெளிநாடுகளில் போலியான நிறுவனங்களை உருவாக்கி சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. பொதுத்துறை நிறுவனங்களும் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் கடும் இழப்புகளை சந்தித்தன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றன.
இந்நிலையில் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தப் போவதாக இன்று அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: தென்காசியில் மத போதகர் கைது
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் மத போதகராக இருப்பவர் ஸ்டான்லி குமார் (வயது 49). இவர் மீது பெத்தநாடார்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் டிஎஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், ‘எனது மகளுக்கு மத போதகர் பாலியல் தொந்தரவு அளித்து தவறாக நடக்க முயன்றுள்ளார். மற்றொரு பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்து, அதைக் காட்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். அது தொடர்பாக அந்த பெண் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வைத்து மிரட்டி வருகிறார். இதனால் மத போதகர் மீது புகார் அளிக்க பலர் அஞ்சுகின்றனர். பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வரும் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பாவூர்சத்திரம் போலீஸாருக்கு டிஎஸ்பி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தி, மத போதகர் ஸ்டான்லி குமாரை நேற்று கைது செய்தனர்.