ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட இந்திய அணியின் முன்னாள் வீர்ர் ராகுல் திராவிட் திட்டமிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான வீர்ர்களில் ஒருவர் ராகுல் திராவிட். சச்சின், கங்குலிக்கு இணையான வீரரான ராகுல் திராவிட், இந்திய பேட்டிங் பெருஞ்சுவர் என்று பெருமையாக அழைக்கப்பட்டார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தார். பின்னர் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்திலும், ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்திலும் அவர் பல இளம் பேட்ஸ்மேன்களை உருவாக்கி உள்ளார். ராகுல் திராவிட் பயிற்சியாளராக இருந்த சமயத்தில் இந்திய அணி பல தொடர்களை கைப்பற்றியது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இறுதிப் போட்டிவரை முன்னேறிய இந்திய அணி, சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
டி20 தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் திராவிட் ஓய்வு பெற்றார். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால் தொடர்ந்து பயணம் செய்ய நேரிடும். அப்படி இருந்தால் குடும்பத்துடன் இருக்க முடியாது. அதனால் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்று ராகுல் திராவிட் அறிவித்தார். ராகுல் திராவிட் பதவி விலகியதைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டார்.
இந்த சூழலில் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாராக செயல்பட ராகுல் திராவிட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்துடன் ராகுல் திராவிட் ஒப்பந்த்ததில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளராவது உறுதியாகி இருக்கிறது.