பொதுவாக ஹீரோயின்களுக்கு காக்கி டிரஸ் அணிந்து கம்பீரமான போலீசாக நடிக்கணும். நாலைந்து பேரை துாக்கி போட்டு அடிக்கணும், வில்லன் டீமை துப்பாக்கியால் ஓட விட்டு சுடணும். ஹீரோக்கள் மாதிரி நாமும் ஆக் ஷனின் களம் இறங்கணும் என்ற எண்ணம் ஆழ் மனதில் இருக்கும். சிலருக்கு அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது. சிலருக்கு நிராசை ஆகியிருக்கிறது.
ஜோதிகா, திரிஷா, சினேகா, காஜல்அகர்வால், கீர்த்திசுரேஷ், ஐஸ்வர்யாராஜேஷ் என பலரும் போலீசாக நடித்துவிட்டனர். அந்தவகையில் சரவணன் மீனாட்சி டிவி சீரியல் புகழ் ரச்சிதாமகாலட்சுமியும் எக்ஸ்டிரீம் என்ற படத்தில் அதிரடி போலீசாக நடித்து இருக்கிறார். ராஜவேல் கிருஷ்ணா இயக்கும் இந்த படம் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் பாணியில் நகர்கிறது. ஹீரோ யாருமில்லை. இது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதை. அயலி சீரியலில் கலக்கிய அபி நட்சத்திராவுக்கு முக்கியமான வேடம். கதையும் அவரை சுற்றிதான் நடக்கிறது.
சென்னையில் நேற்று நடந்த இந்த பட இசை வெளியீட்டுவிழாவில் சிவப்பு கலர் சாரியில் கலர்புல்லாக வந்து போட்டோகிராபர், வீடியோகிராபர்களுக்கு நிறைய வேலை வைத்தார் ரச்சிதா. விழாவில் இயக்குனர் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குனர் ராஜகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குனர் ராஜவேல்கிருஷ்ணா, ‘‘நான் ரச்சிதா பங்கேற்ற பிக்பாஸ், சரவணன் மீனாட்சி சீரியல் பார்த்தது இல்லை. ஆனால், ரச் சிதா நடித்த உப்புகருவாடு பார்த்தேன். அவர் நடிப்பு அருமை. குறிப்பாக, அவர்கள் கண்கள் அபாரம். இந்த படத்திலும் கண்களால் மிரட்டியிருக்கிறார். நாங்கள் அவரை முறைப்படி கமிட் செய்யும்முன்பே இந்த போலீஸ் வேடத்துக்கு பக்காவாக தயார் ஆகிவிட்டார். கதை கேட்டதில் இருந்தே அந்த கேரக்டராக மாறிவிட்டார்’ என்றார்
விழாவில் பேசிய ரச்சிதா ‘‘இப்பவெல்லாம் வாழ்த்துவது குறைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியின் என்னை நிறையபேர் வாழ்த்தினாங்க. ரொம்ப சந்தோஷம், பிக்பாஸ் போட்டியாளர் அந்த வீட்டில் இருந்துவிட்டு வெளியே வந்தபோது, நம் வாழ்க்கை மாறப்போகுது, நிறைய படங்கள் குவியப்போகுதுனு நினைத்தேன். அந்த சமயத்தில் இந்த பட இயக்குனர் ராஜவேல் இந்த படம் பற்றி பேசினார். உங்களுக்கு போலீஸ் வேடம்னு சொன்னார். உண்மையில் அந்த சமயத்தில் இந்த பட இயக்குனருக்கு என்னை பற்றி அதிகம் தெரிந்து இருக்கவில்லை. நான் நடித்த சரவணன் மீனாட்சி கிளிப்ங்ஸ் உட்பட நிறைய வீடியோ அனுப்பினேன். என்னை லுக் டெஸ்ட் எடுக்க வரச்சொன்னார். அந்த கேரக்டர் இப்படிதான் இருக்கணும்னு நிறைய டிப்ஸ் கொடுத்தார். அந்த கேரக்டருக்காக நிறைய மாறினேன். 25 நாளில் படத்தை முடித்துவிட்டோம்.
டிரைலர், டீசர் பார்த்துவிட்டு வாவ் என மிரண்டு விட்டேன். இசை அவ்வளவு அழகாக அமைந்து இருக்கிறது. நான் நடிக்காமல் இருந்து இருந்தாலும், இந்த படத்தை பாராட்டியிருப்பேன். அந்த அளவுக்கு பேஷனேட் ஆக எடுத்து இருக்கிறார்கள். இந்தபடம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்த இயக்குனரை மற்ற தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த அளவுக்கு அற்புதமாக வேலை செய்து இருக்கிறார். பெரிய பட்ஜெட் படம் வருது. அதை நல்லா இல்லைனு சொல்றதை விட, இந்த மாதிரி சின்ன பட்ஜெட்டில் வருகிற நல்ல படத்தை பார்த்து ரசிக்கலாம். படத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க’’ என்றார்.