நிதின் இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பாலாஜிசக்திவேல், ஜார்ஜ்மரியான், இந்திரஜா உட்பட பலர் நடித்த படம் ‘கூரன்’. இந்த படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியவரும் எஸ்.ஏ.சிதான்.
கொடைக்கானலில் வசிக்கும் பிரபல வக்கீலான எஸ்.ஏ.சி, 10 ஆண்டுகளாக எந்த வழக்கிலும் வாதாடாமல் இருக்கிறார். அப்போது ஒரு குடிகாரன் அலட்சியத்தால் தனது குட்டியை இழந்த ஒரு பெண் நாய், ஏஸ்.ஏ.சியை நாடுகிறது. காரில் அடிபட்டு இறந்த தனது குட்டியின் உயிருக்கு நியாயம் கேட்கிறது. நாயின் உணர்வை புரிந்துகொண்ட எஸ்.ஏ.சி அதற்காக கோர்ட் படியேறுகிறார். பல்வேறு ஆதாரங்களுடன் குட்டியை கொன்ற, ஒரு பணக்கார இளைஞனுக்கு தண்டனை வாங்கி தர போராடுகிறார். அது நடந்ததா என்பது கிளைமாக்ஸ்
ஒரு பிரச்னைக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் எஸ்.ஏ.சியை பின் தொடர்கிறது ஒரு நாய். அது ஏதோ சொல்ல வருகிறது என்பதை புரிந்துகொண்டு, நாய் பற்றி விசாரிக்க, அது தனது குட்டியை பறிகொடுத்தை புரிந்துகொள்கிறார். விபத்து ஏற்படுத்தியவனையும் நாயே காண்பித்து கொடுக்கிறது. சட்டரீதியாக அவனுக்கு தண்டனை வாங்கி தர நினைக்கிறார் எஸ்.ஏ.சி.
அப்புறம் நடப்பது கோர்ட் காட்சிகள். நாய்க்காக வாதாடுவது, சட்ட நுணுங்கங்களை பயன்படுத்தி, குற்றவாளி கம் டீமை ஸ்தம்பிக்க வைப்பது, சாட்சிகளை பிடிப்பது, குடியால் ஏற்படும் பாதிப்புகளை பேசுவது என இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ்.ஏ.சி. ஆனாலும், கோர்ட் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கலாம்
எஸ்.ஏ.சி உதவியாளராக வரும் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா ‘துறுதுறு’வென நடித்து இருக்கிறார். ஜட்ஜ் ஆக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், எதிர் தரப்பு வக்கீலாக வரும் பாலாஜிசக்திவேல் ஆகியோரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். ஒரு முக்கியமான சாட்சியாக வரும் ஜார்ஜ் மரியான கேரக்டரும், அவர் பேசும் வசனங்களும் சூப்பர். முக்கியமான கேரக்டராக வரும் நாயின் நடிப்பை, நாய் பயிற்சியாளர் உழைப்பை பாராட்டலாம்.