இப்போதெல்லாம் சினிமா நிகழ்ச்சிகளில் இயக்குனர் மிஷ்கின் மைக் பிடித்து பேசினாலே பரபரப்பு ஏற்படுகிறது. ஏதாவது வித்தியாசமாக, வில்லங்கமாக பேசி மீடியாக்களின் கவனத்தை அவர் பெறுகிறார். கொட்டுக்காளி படம் குறித்து அவர் பேசியது இன்றும் பிரபலமாக இருக்கிறது.
அந்தவகையில் ‘நான் ஈ’ கிச்சாசுதீப் நடிக்கும் ‘மேக்ஸ்’ பட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மிஷ்கின் பேசியதும் கவனம் பெற்றிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியதாவது…
கலைப்புலி எஸ்.தாணுவுக்காக இந்த விழாவுக்கு வந்தேன். அவர் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு நந்தலாலா படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடிக்கவில்லை. அதனால் அவருடன் இணைந்து படம் செய்யும் வாய்ப்பு தவறிப்போனது. இப்போது விஜய்சேதுபதி நடிக்கும் ட்ரைன் படத்தை அவருக்காக இயக்கி வருகிறேன்.
இந்த கதையை நான் அவரிடம் சொல்லவே இல்லை. தாணு போன்று ஒரு தயாரிப்பாளரை பார்க்க முடியாது. இயக்குனரான என்னை தினமும் 2 முறை சந்தித்து பேசுகிறார். படம் குறித்து விவாதிக்கிறார். சினிமா மீது அவ்வளவு காதலாக இருக்கிறார். நந்தலாலாவை ஏன் அவருக்கு பிடிக்கவில்லை என்று இப்போது எனக்கு புரிந்துவிட்டது. ஒரு படம் கமர்ஷியலாகவும் ஓட வேண்டும் என்று நினைக்கிறார். யாரிடம் எந்த கதையை சொல்ல வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்.
அவர் படங்களின் விளம்பரம், போஸ்டரை பார்த்து வியக்கிறேன். என் 27 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் டிரைன் பட்த்தை இயக்கும்போது கிடைத்த சுதந்திரத்தை இதுவரை அனுபவித்ததில்லை. சினிமாவில் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் இளையராஜாவும், தாணுவும்தான்.
மீடியாக்கள் சினிமாக்களை கருணையுடன் அணுக வேண்டும். பொதுவாக என் கதைகள் குறித்து உதவி இயக்குனர்களிடம் விவாதிப்பேன். பின்னர், உலகம் முழுக்க எனக்கு 11 நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு படத்தின் ஸ்கிரிப்டை மெயில் செய்வேன். அவர்களின் கருத்து, ஆலோசனைகளை கேட்டுக்கொள்வேன். ஒரு படத்தை வியாபாரம், கலைத்தன்மை, டெக்னிக்கலாக என 3 விதமாக அணுகலாம்.
இன்றைக்கு ஒரு படத்தை வெளியிட தயாரிப்பாளர் படுகிற பாடு அதிகம். அதனால், என் தயாரிப்பாளர் கண்டிப்பாக லாபம் ஈட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு சினிமாவை ராக்கெட் மாதிரி தயாரிக்கிறார்கள். பல பாகங்கள் இணைந்து ராக்கெட் உருவாகிறது. அந்த மாதிரிதான் சினிமாவும். ஒரு சின்ன தவறால் ராக்கெட் வெடித்து விடுகிறது. அந்த மாதிரி சினிமாவிலும் நடக்கிறது. ஆகவே, விமர்சனங்களை கருணையுடன் சொல்லுங்கள். அந்த இயக்குனர் எப்படிப்பட்டவர், எந்த மாதிரியான படங்களை தந்துள்ளார் என்பதை புரிந்து விமர்சனம் செய்யுங்கள்.