தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை, அத்தியாவசிய தேவைகளுக்கு 100 சதவீதம் எடுக்கும் வகையில் விதிமுறைகளை எளிதாக்கி உள்ளது மத்திய அரசு. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பின் 238-வது மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் பிஎப் பணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளை எளிதாக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, மருத்துவம், கல்வி, திருமணம், வீடு மற்றும் சிறப்பு சூழ்நிலைகள் என அத்தியாவசிய தேவைகளுக்கு இனிமேல் தொழிலாளர்கள் தங்கள் பிஎப் பணத்தில் 100 சதவீதத்தையும் திரும்ப பெறலாம். இது 7 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதியத்தைப் பாதுகாப்பதோடு, தங்கள் சேமிப்பை எளிதாக அணுகவும் முடியும்.
முன்னதாக பிஎப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு 13 வகையான விதிமுறைகளை வைத்திருந்தது. தற்போது அவை எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ஒரு பிரிவின் கீழ் பணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிமுறையை அறிவித்துள்ளது. இது தொழிலாளர்கள் எளிதாக புரிந்து கொள்ளவும், பணத்தை எளிதாக திரும்பப் பெறவும் வழிவகுக்கும். திருமணம், கல்வி செலவுக்கு 3 முறை மட்டுமே பிஎப் சேமிப்பில் இருந்து பணத்தைப் பெற முடியும். தற்போது, கல்விக்கு 10 முறை வரையிலும், திருமணத்துக்கு 5 முறை வரையிலும் பணம் எடுக்க முடியும்.