பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் பிரிவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்று தமிழக வீரர் மாரியப்பன் சாதனை படைத்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பாரலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த டி63 பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் 1.85 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வெற்ற சாதனையை மாரியப்பன் படைத்துள்ளார். இதற்கு முன் 2016-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், டோக்கியோவில் 2020-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றுள்ளார்.
இந்நிலையில், பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து மூன்று முறை பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது பாராட்டுக்குரியது. அவரது திறமை, நிலைத்தன்மை மற்றும் உறுதிப்பாடு ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள. மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த தங்கவேலு மாரியப்பன்?
தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தில் 1995-ம் ஆண்டு பிறந்தவர் மாரியப்பன். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். மாரியப்பனின் தந்தை தங்கவேலு குடும்பத்தை கைவிட்டதால், தாயார் சரோஜா செங்கல் தூக்கியும், காய்கறிகள் விற்றும் குழந்தைகளை வளர்த்துள்ளார்.
மாரியப்பனுக்கு 5 வயதாக இருக்கும்போது நடந்த ஒரு விபத்தில், பேருந்து சக்கரத்தில் சிக்கி அவரது வலது கால் மூட்டு நசுங்கியது. அதனால் அவர் மாற்றுத்திறனாளி ஆனார்.
மாரியப்பனின் உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன், அவருக்கு தடகளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, உயரம் தாண்டும் போட்டியில் சிறுவயதில் இருந்தே மாரியப்பன் ஆர்வம் காட்டினார். பள்ளியில் படித்துக்கொண்டே மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாரியப்பன், 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தேசிய, சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றார்.