உங்கள் ரோல் மாடல் யார்?” என்று கேட்டால் இந்திய விளையாட்டு வீரர்கள் பலரும் பி.டி.உஷாவைத்தான் கைகாட்டுவார்கள். ஆனால் இன்று முதல் முறையாக உஷாவுக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு எதிராக பி.பி.உஷா தெரிவித்துள்ள கருத்துதான் இந்த எதிர்ப்புக்கு காரணம்.
பி.டி.உஷாவுக்கும் மல்யுத்த வீராங்கனைகளுக்கும் இடையிலான மோதலைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், இதற்கு காரணமான மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் போராட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்…
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் தற்காலிகமாக விலகினார். இவ்விஷயத்தில் தலையிட்ட மத்திய அரசு, வீராங்கனைகளின் புகார் குறித்து விசாரிக்க, மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை நியமித்தது. ஆனால் அதன் பிறகு அந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் கோபமடைந்த மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. தங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்பதில் தீவிரமாக உள்ள மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் சாலையிலேயே உடற்பயிற்சிகளைச் செய்வது, உண்பது உறங்குவது உள்ளிட்ட அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். சர்வதேச அளவிலும் இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இனி பிடி உஷா பிரச்சினைக்கு வருவோம்…
மல்யுத்த வீரர்களின் போராட்டம் தீவிரமாகி வரும் நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், முன்னாள் ஓட்ட வீராங்கனையுமான பி.டி.உஷா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள், “மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்திவரும் ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று அவர்களை சந்திப்பீர்களா?” என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த பி.டி.உஷா, “இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக இந்திய ஒலிம்பிக் கமிட்டியில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் இந்த குழுவிடம் தங்கள் பிரச்சினையைச் சொல்லி இருக்க வேண்டும். அங்கு தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் இருந்தால்தான் அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் தாங்களாகவே சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். அவர்களின் இந்த செயல் ஒழுங்கீனமானது. இந்தியாவின் மதிப்பை இந்த போராட்டம் சீர்குலைக்கிறது” என்றார்.
பி.டி உஷாவின் இந்த கருத்து மல்யுத்த வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பி.டி.உஷாவின் இந்த கருத்து தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகட் தெரிவித்துள்ளார். “பி.டி.உஷாவை எங்களின் ரோல் மாடலாக நாங்கள் பார்க்கிறோம். அவரைப்போன்ற ஒருவரிடம் இருந்து இப்படிப்பட்ட ஒரு கருத்து வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு பெண்ணாக இருந்துகொண்டு மற்ற விளையாட்டு வீராங்கனைகளின் பிரச்சினையை அவர் எப்படி புரிந்துகொள்ளாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை. எங்களிடம் இருந்து அவர் மரியாதையை எதிர்பார்த்தால், அவரும் எங்களிடம் மரியாதையாக நடந்துகொள்ல வேண்டும்” என்றும் வினேஷ் போகட் கூறியுள்ளார்.
உஷாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள பிரபல மல்யுத்த வீரரான பஜ்ரங் பூனியா, “சில நாட்களுக்கு முன் தனது அகாடமிக்கு சொந்தமான நிலத்தை சிலர் அபகரிக்க முயல்வதாக பொதுவெளியில் பி.டி.உஷா குற்றம் சாட்டியிருந்தார். இது தேசத்தின் மதிப்பை சீர்குலைக்காதா? ராஜ்யசபா உறுப்பினராக அரசால் நியமிக்கப்பட்ட பி.டி.உஷாவாலேயே தனது அகாடமியின் நிலத்தை காக்க முடியாத சூழல் இருக்கும்போது, எந்த வசதியும் இல்லாத மல்யுத்த வீரர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். அவரது இந்த நடவடிக்கை மல்யுத்த வீரர்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தை தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.