ஆஸ்கர் அமைப்பின் ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்’ நிறுவனத்தில் சேர உலகம் முழுவதும் இருந்து 397 புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்கர் விருது வென்ற 15 பேர் உட்பட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் 71 பேர் உள்ளனர்.
இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா இடம்பெற்றுள்ளார். ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சூர்யா நடித்த `ஜெய் பீம்’ திரைப்படமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகை கஜோலுக்கும் ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவரை தேர்ந்தெடுத்தது, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட உள்ளதாக அறிவித்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர் செல்வம் புகார் அளித்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பதில் மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் விதி மீறி கூட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ள இபிஎஸ், ஓ பன்னீர் செல்வம் அடிக்கடி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி வருவதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து, ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்கள் தரப்புக்கு ஆதரவாக உள்ளனர்,’ என்றும் எடப்பாடி பழனிசாமி பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளார்.
இபிஎஸ் – ஓபிஎஸ் மோதல்: உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கம்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் 510 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 510 இடங்களிலும் கடந்த 20-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்வது நிறைவடைந்தது.
இதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கட்சி சின்னத்தை பெறுவதற்கு படிவம் ‘ஏ’ மற்றும் படிவம் ‘பி’ ஆகியவற்றை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தற்போது அதிமுகவில் நிலவும் ஒற்றை தலைமை பிரச்சினையால் ஏ, பி படிவங்களை அதிமுக வேட்பாளர்களால் வழங்க முடியவில்லை. படிவம் இல்லாத காரணத்தால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக உள்ளாட்சி தேர்தலில் நிறுத்தி வைக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது.
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: ஜூலை 10-ந் தேதி வெளியாகிறது
தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 20-ந்தேதி வெளியானது. இதனையடுத்து, மாணவர்கள் தற்போது என்ஜினீயரிங் மற்றும் கலை கல்லூரிகளில் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகிறார்கள். அதேநேரத்தில் சி.பி.எஸ். இ.தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால்தான் என்ஜினீயரிங் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளில் இடங்களை நிரப்ப முடியும். எனவே சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளுக்காக என்ஜினீயரிங் மற்றும் கலைக்கல்லூரிகள் காத்திருக்கின்றன.
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 10-ந்தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் சி.பி.எஸ். இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 4-ந்தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க மகாராஷ்டிர அரசுக்கு ஆளுநர் உத்தரவு
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு அட்சியில் உள்ளது. இதனிடையே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏக்கள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து, சிவசேனா தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை எனவும், அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரியும் மராட்டிய ஆளுநரிடம் நேற்று பாஜக கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், சட்டசபையை சபாநாயகர் நாளை கூட்டி மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட், டிஎஸ்-இஒ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நாளை மாலை 6 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
டிஎஸ்-இஓவுடன் சிங்கப்பூரின் என்இயு-சாட், ஸ்கூப் 1 ஆகிய செயற்கைக்கோள்களும் நாளை விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் அதிக தெளிவுடன் ஒரே நேரத்தில் பலகோணங்களில் பூமியை படம் எடுக்கும் திறனுடையது. சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.