சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் முன்னான் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் 87 மாவட்ட செயலாளர்கள், 176 ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், “ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணத்திற்கு உறுதுணையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். தேர்தல் விதிப்படி இரட்டை இலை சின்னம், ஒருங்கிணைப்பாளருக்குத்தான் கிடைக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நிச்சயம் அதை மக்கள் செய்வார்கள். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த இளைஞர்கள் உழைக்க வேண்டும்” என்றார்.
நாகாலாந்து ஆளுநராக இல. கணேசன் பதவியேற்பு
நாகாலாந்து மாநில ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றுக்கொண்டார்.
பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநா்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக இருந்த நிலையில் நாகலாந்து ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து இன்று இல.கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். நாகலாந்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னையில் நாளை பாஜக உண்ணாவிரதம்
ராணுவ வீரர் கொலையைக் கண்டித்து பாஜகவினர் சென்னையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தி.மு.க.வினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாட்டைக் காக்கும் ராணுவ வீரரை நடுத்தெருவிலே அடித்துக் கொன்ற தி.மு.க.வை கண்டித்து, 21-ந்தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு சிவானந்தா சாலையில், என் தலைமையில் ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொள்ளும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மயில்சாமி இறுதி ஊர்வலம் – திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் பங்கேற்பு
சென்னையில் இன்று நடைபெற்ற நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரைப் பிரபலங்களும், ராசிகர்களும் ஏராளமாக பங்கேற்றனர்.
சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நடிகர் மயில்சாமி, நேற்று முன்தினம் இரவு சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அங்கு நடந்தது. இதில் பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார். 3.30 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் திரையுஅல பிரபலங்களும், ரசிகர்களும் ஏராளமாக பங்கேற்றனர். மயில்சாமி சிவபக்தர் என்பதால் அவருக்கு கைலாய வாத்தியம் இசைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடபழனியில் உள்ள மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.