தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நீண்ட காலமாக இந்த மசோதாவு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என். ரவி, பின்னர் சில விளக்கங்களை தமிழக அரசிடம் கேட்டார். இதையடுத்து, தமிழக அரசும், ஆளுநர் கேட்ட விளக்கத்தை தெரிவித்தது. ஆனாலும் ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் மீண்டும் காலம் கடத்தினார். 4 மாதங்களுக்கு பின்னர் “ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை” என்று கூறி மசோதாவை திருப்பி அனுப்பினர்.
இதனை தொடர்ந்து கடந்த 23-ந் தேதி சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவை மு.க. ஸ்டாலின் மீண்டும் பேரவையில் தாக்கல் செய்தார். 24-ந் தேதியன்று அதாவது மறுநாளே இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு மீண்டும் அனுப்பிவைத்தது.
மீண்டும் ஆளுநர் காலம் கடத்தி வந்த சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர்னருக்கு எதிராக நேற்று காலை அரசு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளான நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று மாலை ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழ்நாடு காவல்துறை அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒழுக்கத்தை கடைபிடித்து அமைதியான முறையில், மற்றவர்களுக்கு எந்தவொரு ஊறும் விளைவிக்காவாறு பேரணியை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
எல்நினோ மாற்றத்தால் இந்தியாவில் இந்த ஆண்டு இயல்புக்கும் குறைவான மழை: வானிலை மையம் அறிக்கை
இந்தியாவில் இந்த ஆண்டு இயல்புக்கும் குறைவான அளவிலேயே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஸ்கைமேட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதாவது, 2023-ம் ஆண்டில் 94 சதவீதம் அளவுக்கே மழை பெய்யும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆண்டுக்கு சராசரி மழை அளவு என்பது 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் அது மிகவும் குறைவான மழை என்பதை குறிக்கும். இதுபோல 90 முதல் 95 சதவீதத்திற்குள் மழை பெய்தால் அது இயல்புக்கும் குறைவான மழை பொழிவு ஆகும். 96 சதவீதம் முதல் 104 சதவீதத்திற்கு மழை பெய்தால் அது இயல்பான மழை பொழிவு. 105 சதவீதம் முதல் 110 சதவீதம் அளவுக்கு மழை பெய்தால் அது இயல்பைவிட அதிக மழை பொழிவு எனக்குறிப்பிடப்படும்.
இந்தியாவில் இந்த ஆண்டு இயல்பை காட்டிலும் குறைவான மழை பொழிவு இருக்கும் என்பதற்கு காலநிலை மாற்றத்தில் ஏற்பட்ட தாக்கமே காரணம் என்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஆசிய நாடுகளில் இந்த ஆண்டு வறண்ட வானிலை காணப்படும். இதற்கு எல்நினோ மாற்றம் அதிகரித்து வருவதே காரணம். ஆசிய நாடுகள் இடையே வறட்சி அதிகரித்து வருவதும் பருவ மழை இயல்பை காட்டிலும் குறைவாக பெய்ய காரணம் என்று கூறியுள்ளது.
நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்தரி
மகாராஷ்டிராவில் உள்ள பீமா கொரேகானில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் கைதுக்கு உட்படுத்தப்பட்ட சமூக செயற்பாட்டாளரான கெளதம் நவ்லாகாவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.முரளிதர், வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு விடுதலை செய்தது. கௌதம் நவ்லாகாவின் விடுதலைக்கு எதிராக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குர் விவேக் அக்னிஹோத்தரி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் நீதிபதிகள் பாரபட்சமாக செயல்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவதூறு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவேக் அக்னிஹோத்தரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு மூலம் மன்னிப்புக் கோரினார். இந்நிலையில், இன்று நேரில் ஆஜரான அவர் நீதிபதிகளிடம் மன்னிப்பு கோரியதையடுத்து நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது.
பேயை திருமணம் செய்த பெண் பாடகி: ‘பேய் கணவர் தொல்லை’யால் பிரிய முடிவு!
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்ட்ஷையர் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான பெண் பாடகி ராக்கர் ப்ரொகார்டி. இவர் கடந்த ஆண்டு ஹாலோவின் கொண்டாட்டத்தின் போது எட்வர்டோ என்ற ‘ஆவி’யை திருமணம் செய்துகொண்டதாகவும், தனது ‘ஆவி’ கணவரை சந்தித்த 5 மாதங்களிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அந்த பெண் விவாகரத்து கோரியுள்ளார்.
மேலும், ‘திருமணத்திற்கு பிறகு ஆவி கணவர் எனது வாழ்க்கையை நரகமாக மாற்றி விட்டார். பிரிந்து சென்ற பிறகும் கூட என்னையே பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்கிறார். ‘அழும் குழந்தையின் அலறலை’ பயன்படுத்தி எனக்கு தொல்லை கொடுக்கிறார்’ என்று கூறியுள்ள பாடகி, ஆவி கணவருடனான உரையாடலுக்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது பேய் ஓட்டுபவர்களின் உதவியை நாடியுள்ள ராக்கர் ப்ரொகார்டி, தன்னை வேதனைக்கு உள்ளாக்கியதால் ஆவி கணவரிடம் இருந்து விவாகரத்து செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.