ஜெயம் ரவி, நதியா, அசின் நடித்த சூப்பர் ஹிட் படமான
“எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தவிர, ரஜினி நடித்த பாட்ஷா, விஜய் நடித்த சச்சின், ஜெயம்ரவியின் முதல் படமான ஜெயம் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக உள்ளது.
இது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறியது:
எடிட்டர் மோகன் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், 2003 ஆம் ஆண்டு ஜெயம்ரவி சினிமாவில் அறிமுகமான படம் ஜெயம்.
அந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பேசப்பட்டது. 2004 ல் இதே கூட்டணியில் வெளியான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” வெளியானது. அந்த படம் ப்ளாக்பஸ்டராக அமைந்தது. அதிரடி ஆக்ஷன் படமான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மூலமாக நதியா தமிழ் திரையுலகில் ரீ எண்ட் ரி ஆனார். அசின் என்ற ஹீரோயின் கிடைத்தார். அம்மா சென்டிமென்ட் மட்டுமல்ல, அந்த பட பாடல்கள், காமெடி ஆகியவையும் கிளிக் ஆனது. ஜெயம்ரவி, அசின் காம்பினேஷனுக்கும் வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து பல படங்களில் நதியா அம்மா, குணசித்திர வேடங்களில் நடித்தார்.
தெலுங்கில் வெளியான அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி என்ற படத்தின் ரீமேக்தான் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி. ஸ்ரீகாந்த் தேவா இசையில் சென்னை செந்தமிழ், ஐய்யய்யோ ஆகிய பாடல்கள் இன்றும் பிரபலம். இந்நிலையில் புத்தம் புதிய பொலிவுடன் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி ரீ ரிலீஸ் ஆகிறது. நவீன உயர்தர 4K டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், 5.1 அட்மாஸ் சவுண்ட் அமைப்பில், மார்ச் 14ம் தேதி பல தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகிறது.
இதில் ஹீரோயினாக நடித்த அசின் பிற்காலத்தில் தெலுங்கு, இந்தியிலும் முன்னணி ஹீரோயின் ஆனார். பின்னர் தொழிலதிபரான ராகுல்சர்மாவை திருமணம் செய்து டில்லியில் செட்டில் ஆனார். கடந்த ஆண்டு வெளியான கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு ஜெயம்ரவியின் இந்த படமும், ஜெயம் படமும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரஜினியின் பாட்ஷா, விஜய், ஜெனிலியா நடித்த சச்சின் படங்களும் வெளியாக உள்ளது.