மிக்ஜாம் புயல் ஓய்ந்து, தேங்கிநின்ற மழை வெள்ளம் ஒருவழியாக விடைபெற்று விட்ட நிலையில், சென்னைக்குப் புது தலைவலியாக வந்து வாய்த்திருக்கிறது எண்ணூர் கழிமுக எண்ணெய்க்கழிவு பிரச்சினை.
சென்னை புயல் மழையின்போது பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர், மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குள் புகுந்திருக்கிறது. ஆலையில் இருந்த கச்சா எண்ணெய் அப்படியே வெள்ள நீரில் கலந்து, தெற்கு வாசல் வழியாக பக்கிங்காம் கால்வாய், கொசஸ் தலைஆற்றுக்குள் புகுந்து, இப்போது வங்கக் கடல் வரை வந்து நிற்கிறது.
எண்ணூரில் உள்ள எட்டு மீனவக் குப்பங்களிலும், எண்ணெய் கலந்த வெள்ளநீர் புகுந்தபோது பாவம், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. சென்னை அப்போது இருந்த நிலையில் யாரிடம் போய் அவர்கள் முறையிட முடியும்?
வீடுகளில் புகுந்த பிசுபிசு எண்ணெய்படலம், சுவர்கள், பொருட்கள் எல்லாவற்றிலும் பற்றிப்படர்ந்து எங்கெங்கும் பெட்ரோல் நாற்றம். எண்ணெய்க்கழிவு படிந்த உடைகளை முறுக்கிப் பிழிந்து இனிமேல் பயன்படுத்த முடியாத நிலை. எந்த உணவை சமைத்தாலும் அதில் பெட்ரோல் வாசனை. போதாக்குறைக்கு கண்களில் எரிச்சல். கைகால்களில் அரிப்பு. மீனவர்களின் படகுகள், வலைகளில் எண்ணெய்க்கழிவு படிந்ததால் 40 ஆயிரம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை மீனவர்களுக்கு நஷ்டம்.
இருபது சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பற்றிப்படர்ந்த இந்த எண்ணெய்ப் படலத்தால் 20 ஆயிரம் மக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. நூறு வகையான மீன்கள் வாழும் எண்ணூர் கழிமுகப்பகுதியில் மீன்கள், இறால்கள் இறந்து மிதக்கின்றன. பலநூறு பறவைகள் பாதிப்படைந்துள்ளன.
தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து எண்ணூர் எண்ணெய்க் கழிவு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய பற்றி விசாரணை நடத்த, தமிழக அரசு அதன்பங்குக்கு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் உயர்நிலைக்குழுவை அமைத்துள்ளது. ‘இந்த எண்ணெய்க்கழிவு ஒரு செயற்கைப் பேரிடர்’ என்று பசுமைத் தீர்ப்பாயத்தில், தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
எண்ணெய்க்கழிவுக்குக் காரணம் சி.பி.சி.எல். ஆலைதான் என்று தெரிந்துபோன நிலையில், எண்ணெய்க்கழிவு எப்படி பரவியது என்ற ஆராய்ச்சிதான் நடந்ததே தவிர, எண்ணெய்க் கழிவு பரவுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் கொசஸ்தலை ஆறு முழுக்க கறுப்புநிற போர்வை போர்த்தியதைப் போல அடர்த்தியான எண்ணெய்ப்படலம் மூடியிருக்கிறது. கழிமுகப்பகுதியில் 3 அடி ஆழத்துக்கு கழிவு எண்ணெய் ஊறிநிற்கிறது.
பக்கிங்காம் கால்வாய், எண்ணூர் கழிமுகம், கொசஸ்தலை ஆறு எல்லாம் மைக்ரோ கிளைமேட்டிக் தன்மை கொண்டவை. மீன், இறால் போன்றவை இங்குதான் முட்டை யிட்டுக் குஞ்சு பொரிக்கும். தற்போது ஏற்பட்டிருக்கும் எண்ணெய்க்கசிவு மீன், இறால்களுக்கு வேட்டு வைத்துவிட்ட நிலையில், இன்னும் எத்தனை தலைமுறை மீன், இறால்களை இதுபாதிக்கும் என்பது தெரியவில்லை.
இந்த சூழல் சீர்கேட்டால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாதபடி அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல. இனி நிலைமை சீரானாலும்கூட இந்தப் பகுதியில் பிடிக்கப்படும் மீன், இறால்கள் உண்ணத் தகுந்தவையா என்பது தெரியாது. இனிமேல் அவை அதிக விலைக்கும் போகாது. இதனால் கவலையின் உச்சத்தில் இருக்கிறார்கள் மீனவர்கள்.
மீனவர்களின் பிழைப்பு பறிபோன நிலையில், ஒரு டிரம் நிறைய எண்ணெய்க்கழிவை நிரப்பித்தந்தால் ஆயிரம் ரூபாய் என்று சி.பி.சி.எல். ஆலை அறிவிக்க, கையில் கிடைத்த மக், புனல், ஜக்குகளுடன் மீனவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். ‘சரியான பாதுகாப்பு சாதனங்களின் உதவியுடன் எண்ணெய்க்கழிவை அகற்றுவதுகூட ஆபத்தான பணி. இந்த அழகில் வெறும் கைகளால் இப்படி எண்ணெய்க்கழிவை அகற்றுவதால் உடல்ரீதியாக மீனவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுமோ தெரியவில்லை?’ என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.
சி.பி.சி.எல். நிறுவனம் அதன்பங்குக்கு ஸ்கிம்மர்ஸ், கல்லி சக்கர்ஸ், ஜே.சி.பி. இயந்திரங்களைப் பயன்படுத்தி கழிவகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கழிமுகப்பகுதி எண்ணெய்க்கழிவு, கடலில் கலக்காமல் தடுக்க, 750 மீட்டர் நீளத்துக்கு பூமர்ஸ் எனப்படும் மிதவைத் தடுப்பான்களை வைக்கும் பணி நடந்து வருகிறது.. என்னதான் எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்களைப் பயன்படுத்தினாலும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த கழிவகற்றும் வேலை நடப்பதாகத் தெரியவில்லை.
கழிவு எண்ணெய்ப்படலம் பரவியுள்ள பகுதியை பசுமைத் தீர்ப்பாயம் நேரில் பார்வையிட்டு, மாதிரிகளை சேகரித்துள்ளது. ‘டிசம்பர் 7ஆம்தேதி எண்ணெய்க்கழிவு பரவத் தொடங்கியது? டிசம்பர் 14ஆம்தேதி வரை என்ன செய்தீர்கள்?’ என்று சி.பி.சி.எல். நிறுவனத்திடம் அது கேள்வி எழுப்பியுள்ளது.
‘இயந்திரம் மூலம் எண்ணெய்க்கழிவுகளை உறிஞ்சுகிறோம். உயிரிகள் மூலம் கழிவை சிதைக்கும் வேலை நடக்கிறது. 103 படகுகளில் 400 பேர் கழிவகற்றும் பணியில் இறங்கி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமுகாம் நடத்தி அரிசி, மளிகை பொருட்கள் அளித்திருக்கிறோம்’ என சி.பி.சி.எல். நிறுவனம் பதில் அளித்து இருக்கிறது.
‘அதெல்லாம் சரி. உரிய பாதுகாப்பு சாதனங்கள், கருவிகளுடன் கழிவை அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என பசுமைத் தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.
எண்ணூர் கழிமுக எண்ணெய்க்கழிவை அகற்றும் பணியை தமிழக அரசின் மாசுகட்டுப் பாட்டு வாரியம் உள்பட பல்வேறு அமைப்புகள் விறுவிறுப்பாகக் கண்காணித்து வருகின்றன.
இதுவரை 48.6 மெட்ரிக் டன் கழிவு அகற்றப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நீர்கலந்த 36 ஆயிரத்து 800 லிட்டர் எண்ணெய் சேகரிக்கப்பட்டிருப்பதாக சி.பி.சி.எல். நிறுவனம் கூறியுள்ளது. அகற்றப்பட்ட 48.6 டன் கழிவு நச்சுத்தன்மை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணூர் கழிமுகப் பகுதி என்ன பாவம் செய்ததோ தெரியாது? ஏற்கெனவே சென்னை அனல்மின் நிலைய சாம்பல் கலப்பதால் அதிக பாதிப்படைந்து வரும் பகுதி அது. 2017ஆம் ஆண்டு, இதையொட்டிய கடல்பகுதியில்தான் மேபிள், டான் என்ற 2 டேங்கர் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எண்ணெய்க்கசிவு ஏற்பட்டது. ‘போனமுறை கடல், இந்தமுறை கழிமுகம். பட்ட காலில்படும் என்பது போல தொடர்ந்து எங்கள் பகுதியே பாதிப்புக்கு இலக்காகிறது’ என வருந்துகிறார்கள் இங்குள்ள 8 குப்பங்களைச் சேர்ந்த மீனவர்கள். ‘இங்கே நிலைமை சீரடைய குறைந்தது இன்னும் ஆறுமாத காலம் வரை ஆகும்’ என்பது அவர்களது அங்கலாய்ப்பு.
மூன்றடி ஆழத்துக்கு 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கச்சா எண்ணெய்க்கழிவு பரவி இருக்கும் நிலையில், வரும் 18ஆம்தேதிக்குள் 95 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது.
பசுமைத் தீர்ப்பாயமோ, ‘டிசம்பர் 17க்குள் கழிவு அகற்றும் பணியை முடித்து, டிசம்பர் 18-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது.