வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ரைசிங் வடகிழக்கு உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நமது இந்தியா உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடு என்று அழைக்கப்படுகிறது. நமது வடகிழக்கு மாநிலங்கள் இந்த நாட்டின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதியாகும். வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, அதன் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய பலம்
வடகிழக்கு என்றால், உயிரியல் பொருளாதாரம், மூங்கில், தேயிலை உற்பத்தி, பெட்ரோலியம், விளையாட்டு மற்றும் திறன், சுற்றுச்சூழல் சுற்றுலா, கரிமப் பொருட்கள் ஆகியவற்றுக்குப் பெயர் போன பகுதி. அதோடு, வடகிழக்கு என்றால் ஆற்றல் மையம். அதனால்தான் வடகிழக்கு நமது அஷ்டலட்சுமிகள். அஷ்டலட்சுமியின் ஆசியுடன், வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் “நாங்கள் முதலீட்டிற்குத் தயாராக இருக்கிறோம், நாங்கள் தலைமைத்துவத்திற்குத் தயாராக இருக்கிறோம்.” என்று கூறுகிறது.
வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு, கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. மேலும் வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் மிக முக்கியமான பகுதியாகும்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்த கிழக்கு என்பது ஒரு திசையை மட்டும் குறிக்காது. எங்களுக்கு, இதன் பொருள் அதிகாரமளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல் மற்றும் மாற்றுதல் என்பதாகும். இது கிழக்கு இந்தியாவிற்கான எங்கள் அரசாங்கத்தின் கொள்கை.” என தெரிவித்தார்.