கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களே இல்லாமல் இந்தியா தவித்த காலம் ஒன்று இருந்தது. மற்ற அணிகளின் வீர்ர்கள் எல்லாம் 150 கிலோமீட்டர் வேகத்துக்கு அருகில் சென்று பவுன்சர்களும், யார்க்கர்களுமாய் போட்டுத் தாக்குவார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களோ 140 கிலோமீட்டர் வேகத்தை தொடுவதற்கே முக்கி முனகுவார்கள். ஆனால் இப்போது ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஒரு அனல் பறக்கும் வேகப்பந்து வீச்சாளர் அறிமுகமாகி வருகிறார். அதன்படி இந்த ஆண்டு கிடைத்துள்ள வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தன் அறிமுக போட்டியிலேயே 158 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி அனைவரையும் அசத்தியிருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் வீசப்பட்ட 5 அதிவேக பந்துகளில் முதல் 4 வேகப்பந்துகளை வீசியவர் என்ற பெருமையும் ஒரே ஆட்டத்தின் மூலம் படைத்திருக்கிறார் மயங்க் யாதவ். 21 வயதே ஆன மயங்க் யாதவ், திடீரென்று உச்சத்துக்கு வரவில்லை. அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் பல.
டெல்லியைச் சேர்ந்தவரான மயங்க் யாதவின் அப்பா பிரபு யாதவ் ஒரு கிரிக்கெட் ரசிகர். பொதுவாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரடியான பேட்ஸ்மேன்களைத்தான் பிடிக்கும். ஆனால் பிரபு யாதவ் அதற்கு நேர் எதிரானவர். பேட்ஸ்மேன்களைவிட அவருக்கு வேகப்பந்து வீச்சாளர்களைத்தான் பிடிக்கும். அதிலும் வேகத்துக்கு பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர்களான ஆம்புரோஸையும், வால்ஷையும் அவருக்கு மிகவும் பிடிக்கும் வீட்டில் மகனுடன் சேர்ந்து கிரிக்கெட் பார்க்கும் சமயங்களில் அவர்களின் வீரப் பிரதாபங்களைச் சொல்லி வந்திருக்கிறார். அப்பா சொன்ன வீரதீரக் கதைகளைக் கேட்ட மயங்க் யாதவுக்கு, தானும் அப்பாவின் ஹீரோக்களைப்போல் ஒரு வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்ற ஆசை எழுந்திருக்கிறது.
ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்களுக்கான சைரன்களைச் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்த பிரபு யாதவால், தனது மகனுக்குள் கனவை மட்டுமே விதைக்க முடிந்தது. மயங்கை ஒரு வீரனாக்க தேவையான பண வசதி ஏதும் அவருக்கு இல்லை. மகனுக்கு சத்தான உணவுகளை கொடுக்க முடியவில்லை. வேகப்பந்து வீச தேவையான ஷூக்கள்கூட இல்லாமல் ஆரம்ப காலத்தில் வெறும்காலில் ஓடித்தான் பந்து வீசியிருக்கிறார் மயங்க் யாதவ். இந்த நேரத்தில்தான் தாரக் சின்ஹா, தேவேந்தர் சர்மா என்ற இரு பயிற்சியாளர்கள் அவர்களுக்கு கைகொடுத்துள்ளனர். சோனட் கிளப் என்ற தங்களின் அமைப்பில் மயங்க் யாதவைச் சேர்த்து அவருக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.
“மயங்க் யாதவுக்கு 14 வயதாக இருந்தபோது அவன் எங்களிடம் வந்து சேர்ந்தான். நாங்கள் அப்போது எங்கள் கிளப்புக்கு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளரை தேடிக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் மயங்க்கின் அப்பா, அவனை எங்களிடம் அழைத்து வந்தார். சில பந்துகளை மயங்க் வீசிக் காட்டியதும், நாங்கள் தேடும் வேகப்பந்து வீச்சாளர் இவன்தான் என்பதை அறிந்துகொண்டோம்.. உடனே மயங்கை எங்கள் கிளப்பில் சேர்த்து பயிற்சி கொடுக்க தொடங்கினோம். பயிற்சிக்காக வந்தபோது மயங்குக்கு சொந்தமாக ஷூக்கள்கூட இல்லை. அதைக்கூட கிளப்தான் அவனுக்கு வாங்கிக்கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் போஷாக்கான ஆகாரம்கூட அவனுக்கு வீட்டில் கிடைக்கவில்லை. போட்டி நடக்கும் நாட்களிலும், பயிற்சிகளிலும் கிளப்தான் அதற்கு ஏற்பாடு செய்தது” என்கிறார் மயங்கின் சிறு வயது பயிற்சியாளரான தேவேந்தர் சர்மா.
தன்னை ஆதரித்த கிளப்புக்கு மிக விரைவிலேயே சொத்தாக மாறிப்போனார் மயங்க். எதிரணி வீர்ர்களின் தலையை குறிவைத்து மயங்க் பந்துகளை வீச, அவரைக் கண்டாலே மற்ற டெல்லி கிளப்களின் பேட்ஸ்மேன்கள் அலறத் தொடங்கினார்கள். தலையைப் பார்த்து பந்துபோடும் வீரன் என்ற பெயர் வெகு சீக்கிரத்தில் மயங்க் யாதவுக்கு கிடைத்தது.
கிளப் கிரிக்கெட் பயணம் முடிந்து டெல்லிக்காக மயங்க் ஆடச் செல்ல, விஜய் ஹசாரே போட்டியில் அவரது திறன் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு முக்கியமான போட்டியில் எதிரணி வெற்றிபெற 3 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அதை விட்டுக்கொடுக்காமல் டெல்லியை ஜெயிக்க வைத்திருக்கிறார் மயங்க். லக்னோ அணியின் அப்போதைய பயிற்சியாளரான கவுதம் காம்பீரும், விஜய் தாஹியாவும் அந்த போட்டியை பார்த்திருக்கிறார்கள். மயங்கைப் பார்த்து வியந்திருக்கிறார்கள். பையன் சூப்பராக பந்துவீசுகிறானே என்று தோன்ற 2022-ல் நடந்த த ஐபிஎல் ஏலத்தில் மயங்க் யாதவின் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு அவரை வாங்கிப் போட்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்த ஆண்டு அவருக்கு ஐபிஎல்லில் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்த ஆண்டில் (2023) காயம் காரணமாக அவரால் ஐபிஎல் போட்டிகளில் ஆட முடியவில்லை. சரியான ஷூக்களை அணியாமல் பந்து வீசியதால் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி 2 ஆண்டுகள் வீணான நிலையில் இந்த ஆண்டு மயங்க் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
முதல் அடுத்தடுத்து 150 கிலோமீட்டருக்கு மேல் வேகமாக பந்துவீசி லக்னோ அணியை வெற்றிபெறச் செய்திருக்கிறார் மயங்க் யாதவ். இதில் ஒரு பந்தின் வேகம் மட்டும் 155.8.
ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு கைகொடுத்த முகமது ஷமி, இப்போது அறுவைச் சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருக்கிறார். டி20 உலகக் கோப்பையில் அவரது இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழ, இப்போது அதற்கு விடையாய் வந்திருக்கிறார் மயங்க் யாதவ்.