No menu items!

நியூஸ் அப்டேப்: 16 லட்சம் இந்தியர்களுக்கு தடை விதித்த வாட்ஸ்அப்

நியூஸ் அப்டேப்: 16 லட்சம் இந்தியர்களுக்கு தடை விதித்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தடை குறித்து “வாட்ஸ்அப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காக 16.66 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளோம். நாங்கள் குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். ஏனென்றால், தீங்கு ஏற்பட்ட பிறகு அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முதலில் தடுப்பது மிகவும் சிறந்தது” என்று வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.

கோடை விடுமுறை குறைப்பு: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் 14-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5-ந் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பள்ளிக்கல்வி துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும்படி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.

கோடை விடுமுறை குறைக்கப்பட்டதால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் கோதுமை தட்டுப்பாடு: இந்தியாவிடம் எகிப்து, வங்கதேசம், ஜமைக்கா கோரிக்கை

சர்வதேச அளவில் கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகள் இந்தியாவிடம் கோதுமை சப்ளை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

கோதுமை இறக்குமதியில் முதலிடத்தில் இருக்கும் எகிப்துக்கு தற்போது உக்ரைனிடமிருந்து கோதுமை இறக்குமதி செய்ய இயலாத சூழல் உள்ளது. இதையடுத்து இந்தியாவிடம் 5 லட்சம் டன் கோதுமை சப்ளை செய்யுமாறு எகிப்து கோரிக்கை வைத்துள்ளது. இதுபோல் வங்கதேசம,  ஜமைக்கா மற்றும் சில ஆசிய நாடுகளும் இந்தியாவிடம் கோதுமை சப்ளைக்காக கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், உள்நாட்டில் கோதுமை விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மது போதையில் தகராறு செய்தவர்கள் மீது லாரியை ஏற்றிய வடமாநில ஓட்டுநர்: 2 பலி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான லாரி பார்க்கிங் யார்டில் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 36) குமரன் (34) நவீன் (25) ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது வடமாநில லாரி டிரைவர் லாரியை எடுக்க முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக மூவருக்கும் வடமாநில லாரி டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது மது போதையில் இருந்த மூவரும், லாரி கண்ணாடியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வடமாநில லாரி ஓட்டுநர், மூவர் மீதும் லாரியை ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இதில், கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். படுகாயங்களுடன் இருந்த குமரன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவீன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணையா லால் சிங், கிளீனர் கிரீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

ஈரோடு மாவட்டத்தில் கீழ் பவானி வாய்க்காலின் கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த மாதம் 29-ம் தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். ஆனால், அந்த போராட்டத்தை கட்சியின் தலைமை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது.  இதனால், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்த், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் லோகுபிரகாசு, மேற்கு மாவட்ட செயலாளர் தாமோதரன், வடக்கு மாவட்ட செயலாளர் அப்புசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரகுமார், வடக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் போன்ற முக்கிய நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும், உறுப்பினர்கள் பதவியில் இருந்தும் விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...