நடிகர் விஜய், கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.
அதே சமயம் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வணிக வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இறக்குமதி கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் எனவும், 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் உடல்நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி
தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு முதலமைச்சரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உடல் நலம் விசாரித்தார். பிரதமருக்கு நன்றி கூறிய முதலமைச்சர், அவரிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், சென்னையில் வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தன் காலமானார்
தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘ஜீவா’, ‘வெற்றிவிழா’, ‘மை டியர் மார்த்தாண்டன்’, ‘மகுடம்’, ‘ஆத்மா’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘லக்கி மேன்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளவர் பிரதாப் போத்தன். ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். ‘அழியாத கோலங்கள்’, ‘மூடுபனி’, ‘இளமைக் கோலம்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘சிந்து பைரவி’, ‘ஜல்லிக்கட்டு’, ‘பேசும் படம்’, ‘பெண்மணி அவள் கண்மணி’, ‘படிக்காதவன்’ (தனுஷ்), ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர மலையாளத்தில் ‘ரித்துபேதம்’, ‘டெய்ஸி’, ‘ஒரு யாத்ரமொழி’ உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்.
தமிழில் முதல் முறையாக கமல்ஹாசன் நடித்த ‘வெற்றி விழா’ திரைப்படத்தில் ஸ்டெடி கேமராவை பயன்படுத்தியவர் பிரதாப் போத்தன் தான். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரதாப் போத்தன் சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு 70 வயதாகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் இன்று பிரதாப் போத்தன் காலமானார். அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எது தாழ்ந்த சாதி? சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வியால் சர்ச்சை
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்.ஏ. வரலாறு பாடத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், தமிழ்நாட்டில் உள்ள நான்கு சாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அதில் எது தாழ்ந்த சாதி என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி சாதிய பாகுபாடு கருத்தை ஊக்குவிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அப்பல்கலைக்கழக துணைவேந்தர், “வினாத்தாள்கள் வெளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலமாக தயாரிக்கப்படுகின்றன. வினாத்தாள்கள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதால் முன்கூட்டியே பிரித்து படித்து பார்ப்பதற்கான வழக்கம் இல்லை. இதனால் இதுபோன்ற தவறுகள் நேர்ந்திருக்கலாம். இதுவரை எங்கள் கவனத்திற்கு வரவில்லை. இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த பாடத்திற்கு மறு தேர்வு நடத்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும்” என கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகல்: அதிகாரபூர்வ அறிவிப்பு
சிங்கப்பூர் தப்பிச் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்து தமது இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து, கோட்டாபய விலகல் கடிதம் கிடைத்ததாகவும், அதனை ஏற்பதாகவும், இலங்கை நாடாளுமன்ற சபைத் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார். இதையடுத்து ‘கோட்டா வீட்டுக்குப் போ’ (கோட்டா கோ கம) என்ற முழக்கத்தோடு போராட்டம் நடத்தி வந்தவர்கள் தற்போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘2022 ஜுலை மாதம் 14 முதல் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் செல்லுபடியாகும். புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுவரை, அதிபர் பொறுப்புக்களை நிறைவேற்றும் கடமை, அரசியலமைப்பிற்கு அமைய, பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது’ ’ என மஹிந்த யாப்பா கூறியுள்ளார்.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அமைச்சர் நாசர் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருத்தணி கோவில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் சா.மு. நாசருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து அமைச்சர் சா.மு. நாசர், அடையாறில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே சிகிச்சை பெறுவதாக டுவிட்டர் மூலம் தெரியப்படுத்தி உள்ளார்.