மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலம் விசாரித்தார்.
முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடந்த செவ்வாய்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க. ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் நேற்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மு.க. ஸ்டாலினின் உடல் நலம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலம் விசாரித்துள்ளார். மேலும், அவர் விரைந்து நலம்பெற வேண்டும் என வாழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது,
ஓபிஎஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – செல்லூர் ராஜூ
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம். இபிஎஸ்சைப் பார்த்து ஓபிஎஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ கூறும்போது, “அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம். ஓ.பி.எஸ் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை. யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஓ.பி.எஸ். புரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க.வில் ஜாதி ரீதியாக பதவி வழங்குவதில்லை. அ.தி.மு.க.வில் ஜாதி இல்லை. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருத்தம் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பின்னால் யார் வேண்டுமானாலும் வரலாம். அ.தி.மு.க.வை நம்பியவர்கள் கெட்டதில்லை. அ.தி.மு.க.வை நம்பாமல் கெட்டவர்கள்தான் உள்ளனர். ரவீந்திர நாத்தை நீக்கியதால் அ.தி.மு.க.வு.க்கு எந்தவொரு இழப்பும் இல்லை” என்றார்.
இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு
இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்சே நேற்று விலகினார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு அவர் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுள்ளார்.
புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே செயல் அதிபராக செயல்படுவார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்கள் வரும் 19-ம் தேதி பெறப்படும் என்றும், அதற்கான வாக்கெடுப்பு 20-ம் தேதி நடத்தப்படும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
சங்கரய்யா பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து
சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சங்கரய்யாவின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கத்தை அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் தகைசால் தமிழர் தோழர். சங்கரய்யாவுக்கு, 101-வது பிறந்தநாளில் உங்களில் ஒருவனாக வாழ்த்துகளைப் பகிர்கிறேன். போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த அவர் இன்னும் பல்லாண்டு வாழ்க” என தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாலர் கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் தா,மோ.அன்பரசன் உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.