சிவாஜி கணேசன் நடிகராக இருந்தபோது பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி இருந்தார். அதில் சில சொத்துக்களை தங்களுக்கு தெரியாமல் நடிகர் பிரபுவும் அவரது அண்ணன் ராம்குமாரும் விற்று விட்டதாகவும் சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்துவிட்டதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தங்கள் தந்தை சம்பாதித்த சொத்து தொடர்பாக உயில் எழுதி வைக்காத நிலையில், பிரபுவும் ராம்குமாரும் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களின் தாய் வழி சொத்துக்களிலும் தங்களுக்கு பங்கு வழங்கவில்லை எனவும் அவர் சேர்த்து வைத்த சுமார் 10 கோடி மதிப்புள்ள 1000 சவரன் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்களையும் தங்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் நடிகர்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்துள்ளனர்.
மாட்டுக்கறி ட்விட் சர்ச்சை – சென்னை காவல்துறை விளக்கம்
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அபூபக்கர் என்பவர் நேற்றைய தினம் `மாட்டு கறி’ என கேப்ஷன் போட்டு மாட்டுக்கறி உணவின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பெருநகர சென்னை காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து `இத்தகைய பதிவு, இங்கு தேவையற்றது’ என பதில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தப் பதிவை குறிப்பிட்டு, `மாட்டுக் கறி உண்ணுவது குற்றமா?’ என பலரும் தங்கள் கண்டனத்தை காவல்துறையின் பதிலின் கீழேயே பதிவு செய்தனர். திமுக-வின் தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில்குமார், “யார் இந்த ஐடி-ஐ ஹேண்டில் செய்வது? அந்த பதிவில் என்ன தப்பு? என பதிவிட வேண்டும். என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை காவல்துறை எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை சொல்கிறது? கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” என்று கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில், தற்போது சென்னை காவல்துறையின் பதில் பதிவு ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதில், “அபுபக்கர், தாங்கள் பதிவிட்டTweet சென்னை காவல்துறை பக்கத்தில் Retweet செய்யப்பட்டதால், `பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்’ என்ற காரணத்திற்காக அந்த பதில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே அது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம்’ என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய வகை கொரோனா – WHO தகவல்
இந்தியாவில் BA 2.75 என்ற புதிய வகை கொரோனா பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதோனம் கேப்ரியேசஸ், “ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் BA.4, BA.5 வகை திரிபுகள் உள்ளன. இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் BA 2.75 என்ற திரிபு பரவி வருகிறது” என்று கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியான சவுமியா செல்லமுத்து கூறுகையில், “BA 2.75 புதிய திரிபு இந்தியாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்து அது மேலும் 10 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இது தொடர்பான மரபணு பகுப்பாய்வு தகவல்கள் இப்போது தான் கிடைக்கப்பெற்று வருகிறது. இந்த புதிய திரிபு தடுப்பூசி தரும் எதிர்ப்பாற்றலில் இருந்து தப்பித்து தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதேநேரம், மருத்துவ ரீதியாக தீவிர சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்றார்.
லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்: சிகிச்சை தொடர்பாக பிரதமர் மோடி விசாரிப்பு
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டி உள்ளது. முன்னதாக, லாலு பிரசாத் யாதவ் நேற்று முன்தினம் தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவும் காயமும் ஏற்பட்டது. உடனடியாக அவரை பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிறிது நேரத்தில் லாலு உடல்நலம் மேலும் மோசமானதால் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். “லாலு பிரசாத்தின் உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது; சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்த அழுத்த மாறுபாடு, கூடுதல் சர்க்கரை பிரச்சனையால் லாலு அவதிப்பட்டு வருகிறார்” என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, லாலு பிரசாத் அவரது உடல்நிலை குறித்து லாலு மகன் தேஜஸ்ரீயிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
மாட்டுத் தீவன ஊழல் உள்ளிட்ட 5 வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற லாலு, கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். தற்போது உடல்நிலை காரணமாக ஜாமீனில் உள்ளார்.
இலங்கை நெருக்கடி மற்ற ஆசிய நாடுகளுக்கான பாடம் – மலேசிய முன்னாள் பிரதமர் எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அந்நாட்டின் கடன் சுமையும் ஆசிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக ஆசிய நாடுகளுக்கு அறிவுரை கூறியுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத், “கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் அளவுக்கு போதுமான நிதி இருப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் இலங்கைக்குள்ள பெரிய பிரச்னை. மிக மோசமான முதலீட்டுக் கொள்கையும் மோசமான நாணய, நிதி மேலாண்மையும்தான் இதற்குக் காரணம். இது அனைவருக்குமான பாடம்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியை அணுகும்போது அவை இரண்டும் ஒரு நாடு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துகிறதா என்பதை மட்டுமே கவனம் செலுத்தும். மற்றபடி, உங்கள் நாட்டுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக என்ன நேர்ந்தாலும் அவை கண்டுகொள்ளாது. அவர்கள் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். மேலும், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளையும் தாங்களே வகுக்க நினைப்பார்கள். அப்படியெனில், நாம் அவர்களிடம் சரணடைய வேண்டும் என்று அர்த்தம்,” என்று மகாதீர் மொஹம்மத் கூறியுள்ளார்.