கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி தேவநந்தா என்பவர் உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் பிரவீன் (வயது 22), பரிமலேஸ்வரன் (21), மணிகண்டன் (22) ஆகியோர் நேற்று இரவு ஒரத்தநாடு பிரிவு சாலையில் உள்ள துரித உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டனர். பின்னர் விடுதிக்கு சென்றனர். அப்போது திடீரென 3 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கெட்டுப்போன சிக்கனை கொண்டு ஷவர்மா தயார் செய்யப்பட்டதா என்பது என சோதனை நடத்த உள்ளனர்.
அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு உடல்நலக்குறைவு
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தனது வீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வரும் 40 கட்டிட தொழிலாளர்களுக்கு சித்திரைவேல் என்பவர் அப்பகுதியில் உள்ள பிரியாணி கடையிலிருந்து 40 பொட்டலங்கள் வாங்கி கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட கட்டிடத் தொழிலாளர்கள் 11 பேருக்கு உடனடியாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிட உரிமையாளர் சித்திரை வேல், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்நிலையில், பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரியாணி சாப்பிட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது. கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன் கணபதி ஹோமம் பாடல்: அமைச்சர் நிகழ்ச்சியில் சர்ச்சை
கோவையில் 2 நாட்கள் தேசிய கயிறு மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில், கயிறு தொழிலை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே, இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வெர்மா, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் நகர்புற வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கயிறு வாரிய தலைவர் குப்புராமு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், நிகழ்ச்சிக்கு முன்னர் வழக்கமாக பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படாமல் கணபதி ஹோமம் பாடப்பட்டது. பின்னர்தான் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முன்பாக கணபதி ஹோமம் பாடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் கன்னியாகுமரி, நெய்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கலம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்கிளல் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது: 9.55 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. மொத்தம் 9.55 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் செய்யப்பட்டிருந்தது.