அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகத்தில், பாலின பாகுபாடு கடைப்பிடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அலுவகத்தில், அனுபவம் வாய்ந்த பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், சமமான பதவிகளில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியத்தையே கூகுள் வழங்குவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து 2017-ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், 2013-ம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது.
இதேபோல கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் மீது பாகுபாடு காட்டியதாக 38 லட்சம் டாலர்கள் அபராத தொகையை கூகுள் அமெரிக்க தொழிலாளர் துறைக்கு செலுத்த ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
எது நடந்ததோ அதுதானே வரலாறு: அமித்ஷாவுக்கு நிதிஷ் குமார் பதில்
வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்று சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அமித்ஷா கேட்டுக்கொண்டார். முகலாயர்கள் மீது மட்டுமே வரலாற்று ஆய்வாளர்கள் கருத்தாக இருந்தனர் என்றும் எத்தனையோ இந்து மன்னர்கள் இருந்தும் அவர்களைப் பற்றி எழுதவில்லை என்றும், எனவே வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்றும் அமித்ஷா பேசினார்.
இதற்கு பதில் அளித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “வரலாற்றை எப்படி மாற்றி எழுத முடியும்? எது நடந்ததோ அதுதானே வரலாறு” என்று குறிப்பிட்டுள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் இந்த கருத்து கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதேயே காட்டுவதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் மோதியதில் எலும்பு முறிவு: ப.சிதம்பரம் தகவல்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல் துறையினர் தள்ளிவிட்டதில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் இடது விலா எலும்பு உடைந்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிதம்பரம், ‘மூன்று பெரிய, முரட்டுத்தனமான போலீஸ்காரர்கள் உங்கள் மீது மோதும்போது முனைப் பகுதியில் மட்டும் பாதிப்புடன் நீங்கள் தப்புவது அதிர்ஷ்டம். விலா எழும்பு முனைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால், 10 நாட்களில் குணமாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிராம கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர்: ஆச்சிரியத்தில் சொந்தங்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு தீத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தொழில் நிமித்தமாக தனது குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் நடராஜன் இரும்பு கடை வைத்து நடத்தி வருகின்றனர். மற்றொரு மகன் ராஜதுரை ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள இவர்களது தீத்தாம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. இந்தத் திருவிழாவை காண தன் குடும்பத்தினர் செல்வதற்கு தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்தார், பாலசுப்பிரமணியன். அதன்படி நடராஜன், அவரது மனைவி சுந்தரவல்லி மற்றும் மகன், பேரன், மற்றும் உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் தனியார் ஹெலிகாப்டர் மூலமாக தெற்கு திப்பம்பட்டி வந்தனர்.
சொந்த ஊருக்கு ஹெலிகாப்டரில் வந்தவர்கள் இரண்டு முறை அந்த ஊரை ஹெலிகாப்டரில் சுற்றி வந்தனர். இதை கண்ட கிராம மக்கள் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்தனர். பாலசுப்பிரமணியன் குடும்பத்தினருடன் கிராம மக்களில் சிலர் செல்பி எடுத்துக்கொண்டனர். அதில் சிலர் ஹெலிகாப்டரில் ஏறி ஒரு ரவுண்ட் சென்று வந்தனர். பின்னர் அதே ஹெலிகாப்டரில் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் ஊருக்கு திரும்பினர்.
இனி பிஹெச்.டி படிக்க முதுநிலை கல்வி கட்டாயமில்லை; இளநிலை கல்வியே போதும் – யுஜிசி அறிவிப்பு
முனைவர் படிப்புக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் என்று விதி உள்ளது. இந்நிலையில், தற்போது அது கட்டாயமில்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இவ்வருடத்துக்கான புதிய நெறிமுறைகளில் இந்த தளர்வுகள் கூறப்பட்டுள்ளன.
இத்திட்டமானது, தேசிய கல்வி கொள்கையின் கீழ் நான்கு ஆண்டு கால இளநிலை படிப்பை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதாக பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மிகமுக்கிய நிபந்தனையாக இருப்பது, “8 செமஸ்டர் / 4 ஆண்டு கால இளநிலை கல்வியை கற்போர், குறைந்தபட்சமாக 10-க்கு 7.5 என்று சிஜிபிஏ வைத்திருக்க வேண்டும்” என்பது மட்டுமே உள்ளது. இதில் எஸ்.சி / எஸ்.டி / ஓ.பி.சி. / மாற்றுத் திறனாளிகள் / பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு சிஜிபிஏ அளவுக்கு கூடுதலாக 0.5 % தளர்வு அளிக்கப்படுகிறது.