சென்னையைச் சேர்ந்த 16 வயது செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக அளவில் செஸ் போட்டிகளில் 5 வயது முதல் பல்வேறு போட்டிகளில் வென்று வருகிறார். சமீபத்தில் நடந்த செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடரில் அவர் 2-வது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐஓசி) வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா, தனது 18-வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதுரை தேனி ரயில் சேவை தொடக்கம்
மதுரை – தேனி அகல ரயில் பாதையில் 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி இதை காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.
இந்த ரயில் தினமும் மதுரையில் இருந்து காலை 8:30 மணிக்கும், தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6:15 மணிக்கும் புறப்படும். கட்டணம் ரூ.45. இந்த பாதையில் ரயில் சேவை தொடங்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கலைஞர் சிலை திறப்பு விழா: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கலைஞர் சிலை திறப்பு விழாவை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டின் மூத்த தலைவராகவும், திராவிட இயக்கத்தின் நெடும்பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் ஓய்வின்றி உழைத்தவருமான நம் ஆருயிர்த் தலைவர் கலைஞருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படும் நாள் (மே 28), நம் அனைவருக்கும் தித்திப்பான நாள்! திசையெல்லாம் மகிழ்ச்சி பரவிடும் நாள்!
இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்! முதல்வர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்!” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகையை கொலை செய்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இரண்டு பேரும் 24 மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த மூன்று நாட்களில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 7 பேர் உட்பட 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி.விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை அமரீன் பட்டை கொலை செய்த பயங்கரவாதிகள் இரண்டு பேரை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து சுட்டுக் கொலை செய்ததாக ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட நடிகையுடன் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான சிறுமி தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.