No menu items!

நியூஸ் அப்டேட்: எனக்கு இப்போது மரணம் இல்லை – நித்தியானந்தா

நியூஸ் அப்டேட்: எனக்கு இப்போது மரணம் இல்லை – நித்தியானந்தா

நித்தியானந்தா நேற்று தனது முகநூல் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “அனைத்து பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு ஒரு சிறந்த செய்தி, அனைத்து மருத்துவ அறிக்கைகளும் தெளிவாக உள்ளன. என்  அனைத்து உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்கிறது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. அலோபதி அமைப்பின் மூலம் அனைத்து நோய் கண்டறிதல்களும் நடத்தப்பட்டுள்ளது.

ஒரே விஷயம், என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. இதே போல எனக்கு உறக்கமும் இல்லை. நிர்வி கல்ப சமாதியில் எனது நித்ய சிவ பூஜையை தவிர உடலில் எந்த இயக்கமும் தன்னிச்சையாக நடக்கவில்லை. என்னை கவனித்து கொண்டிருக்கும் டாக்டர்கள், சீடர்கள் என்னை கீழே படுக்க வைத்து நன்றாக மூச்சு விடும்படி வற்புறுத்துகிறார்கள். 6 மாதங்களுக்கு மேலாக உணவு மற்றும் உறக்கம் இல்லாமல் இவ்வாறு நிர்வி கல்ப சமாதியில் இருப்பது எனக்கு வழக்கமானது தான். எனவே, சீடர்கள் என் உடல் நிலை பற்றி கவலைபடத் தேவையில்லை.

எனக்கு இப்போது மரணமோ, விதேக சமாதியோ இல்லை. எனது பக்தர்கள் மற்றும் சீடர்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, எனது வாழ்க்கை மற்றும் நான் செய்த வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளேன். எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை. இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வெறுப்பும் இல்லை. எனது குருநாதர் அருணகிரி யோகேஸ்வரா என் உடல் முழுவதும் கலந்துள்ளார். என் உடல் எவ்வளவு காலம் சுறுசுறுப்பாகவும், உயிருடனும் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் அவர்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக 256 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்

தமிழகத்தில் மலை கிராமங்கள், தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக 256 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவை திட்டத்தை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். கிராமப்புறங்களில் வீடுகளுக்கு நேரடியாக மருத்துவர்கள் சென்று மருத்துவ சேவை அளிப்பதற்காக ஏற்கனவே 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு,க,ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். பொதுமக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் 2வது கட்டமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கூடுதலாக 256 நடமாடும் மருத்துவ வாகன சேவையை தொடங்கிவைத்தார். மேலும் அந்த வாகனத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இதன் மூலம் தமிழகத்தில் நடமாடும் மருத்துவ வாகன சேவை 645 ஆக சுகாதாரத் துறையின் சார்பில் உயர்த்தபட்டுள்ளது.

போலீசாரின் புத்துணர்வு பயிற்சிக்கு ரூ.10 கோடியில் புதிய திட்டம்

போலீசாருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ.10 கோடி செலவில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார். எழும்பூர் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் முதல் மாடியில் புதிதாக சுய சேவை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.  இதை தொடங்கிவைத்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, “காவலர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் தற்போது வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 10 கோடி செலவில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பணியின்போது நடந்து கொள்வது எப்படி? என்பது பற்றியும் மனம் மகிழ்வுடன் இருக்கும் வகையிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.

கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் – அமெரிக்கா நம்பிக்கை

கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என   ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட்  தெரிவித்துள்ளார். கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோதுமையின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐநாவுக்கான அமெரிக்க தூதர்  லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட் , “ஏற்றுமதி தடை வேண்டாம் என பல்வேறு நாடுகளிடம் நாங்கள் சொல்லி வருகிறோம். ஏனெனில் இத்தகைய தடை பல்வேறு நாடுகளில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என கருதுகிறோம். உணவு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் இந்தியாவிடம் கோதுமை ஏற்றுமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு தெரிவிப்போம். அவர்கள் அதனை நிச்சயம் மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறோம்” என்றார்.

நூல் விலை உயர்வு – மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திப்பு

நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் சுமார் 2 லட்சம் விசைத்தறி நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பருத்தி, நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நாளை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் திமுக. எம்.பி. கனிமொழி தலைமையில் தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திக்க உள்ளனர். அனைத்து எம்.பி.க்களும், நெசவாளர்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என நேரில் வலியுறுத்த உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...