எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்ததில் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நாளை (7-ந்தேதி) வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி நாளை பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம்.
Youtube, Twitter, Facebookஇல் பொய் தகவல்களை பரப்பினால் நடவடிக்கை: டிஜிபி உத்தரவு
தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் மாநகர மாவட்ட காவல்துறையின் சமூக ஊடக குழு தொடங்கப்பட்டுள்ளது. Youtube, twitter, facebook போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும் சண்டைகளையும் கலவரங்களையும் காவல்துறைக்கு அவபேரையும் ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கவனிக்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து அந்த வதந்தி பதிவுகளை நீக்கவும் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும் கணினி சார்க் குற்ற வழக்குகளை பதிவு செய்வதற்கு இக்குழு துரிதமாக செயல்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
ரூ. 500-க்கு சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3000: குஜராத்தில் ராகுல் காந்தி வாக்குறுதி
குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் பரிவர்த்தன் சங்கல்ப் பேரணியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். இந்த பேரணியில் சிறப்புரை ஆற்றிய ராகுல் காந்தி, “குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 3000 ஆங்கில வழிப் பள்ளிக்கூடங்கள் உருவாக்கப்படும்; பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். ரூ.3 லட்சம் வரை விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3000 உதவித்தொகை வழங்கப்படும். ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சமையல் எரிவாயு, ரூ. 500-க்கு விற்கப்படும். மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்” என்று கூறினார்.
ஏறும் ஸ்டேசனை தவறவிட்டால் டிக்கெட் ரத்தாக வாய்ப்பு: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்
பயணிகளின் டிக்கெட்களை எளிதாக பரிசோதிக்கும் விதமாக,தெற்கு ரயில்வேயில் 185 ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு 800 கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள், ‘இந்த கையடக்க கணினி மூலமாக, பயணச் சீட்டுகளை எளிதாக சரிபார்க்க முடியும். காலியாக உள்ள இருக்கைகள், படுக்கைகள் விவரத்தை உடனடியாக பயணிகள் முன்பதிவு தரவு நிலையத்துக்கு அனுப்ப முடியும். இதன்மூலம், வழியில் உள்ள ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் இந்த காலியிடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதற்காக ரயில் புறப்பட்டு அடுத்த 15 முதல் 20 நிமிடங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் பரிசோதனையை தொடங்கி, பயணியர் பட்டியலை கையடக்க கணினி மூலமாக, உடனுக்குடன் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பயணிகள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட நிலையத்தில் ரயிலில்ஏறிவிட வேண்டும். இல்லாவிட்டால், முறைப்படி போர்டிங் பாயின்ட் நிலையத்தை மாற்றம் செய்தாக வேண்டும். மாற்றாமல் இருந்தால், டிக்கெட் ரத்தாகும்” என்று தெரிவித்துள்ளனர்.
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 65 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்
சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று மதியம் 12.52 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமைடந்துள்ளனர். சுமார் 300க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் படுகாயம் அடைந்தோர் எண்ணிக்கையும் மேலும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.