விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரிடம் இதுபற்றி விசாரணை நடத்த மத்திய, மாநில உளவுப் பிரிவினர் முடிவெடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.
பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் திரட்டத் தொடங்கியுள்ளனர். பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதானி விவகாரத்தில் பாஜக பயப்பட எதுவுமில்லை – அமித் ஷா
அதானி விவகாரத்தில் பாஜக பயப்படுவதற்கு எதுவுமில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அதானிக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் அமித் ஷா, “அதானி விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை இருப்பதால் மந்திரியாக இந்த விவகாரத்தில் நான் கருத்து சொல்வது சரியல்ல. ஆனால், இதில் பாஜக பயப்படவோ, மறைக்கவோ எதுவும் இல்லை” என்றார்.
ஐசியின் சிறந்த வீரராக சுப்மான் கில் தேர்வு
ஐசிச்யின் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரராக சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இதன்படி கடந்த ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் டேவான் கான்வே, இந்தியாவின் ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வாகி இருந்தனர்.
இந்நிலையில், ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷுப்மன் கில் வென்றுள்ளார். கடந்த மாதம் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும், டி20 தொடரில் சதமும் அடித்ததால் இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். , ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் வென்றார்.
ஈரோடு கிழக்கில் ஈபிஎஸ் நாளை பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாலை முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
மாலை 5 மணியளவில் வீரப்பன் சத்திரம் பகுதி, பெரியார் நகர் பகுதிகளில் தனது பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். தொடர்ந்து வீரப்பம்பாளையம், வெட்டுகாட்டு வலசு, நாராயண வலசு, டவர் லைன் காலனி, குமலன் குட்டை மாரியம்மன் கோவில் அருகில், கலெக்டர் அலுவலகம், சம்பத் நகர், பெரிய வலசு நால்ரோடு, கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, மணிக்கூண்டு ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் வீரப்பன்சத்திரம் பகுதியில் தனது முதல் நாள் பிரசாரத்தை முடித்து கொள்கிறார். தொடர்ந்து 16, 17-ந்தேதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
பின்னர் 2-வது கட்ட பிரசாரத்தை அடுத்த வாரம் 24, 25-ம் தேதிகளில் பிரசாரத்தை மேற்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.