மத்திய அரசில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்துவந்த முக்தர் அப்பாஸ் நக்வி, அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். முன்னதாக இவரது ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான காலம் சமீபத்தில் முடிந்தது. மீண்டும் ராஜ்யசபாவுக்கு போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேநேரத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட இவருக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதனால்தான் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிதம்பரம் கோவிலில் நடந்தது என்ன? தமிழிசை விளக்கம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் பெருமாள் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்ய தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் சென்றிருந்தார். அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் அவர் அமர்ந்துள்ளார். அப்போது தீட்சிதர் ஒருவர், இங்கே நீங்கள் உட்கார கூடாது, எழுந்து செல்லுங்கள் என்று தமிழிசையிடம் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன், “சிதம்பரம் கோவிலில் எனக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை. ஆயிரங்கால் மண்டபப் படியில் அமரக் கூடாது என்று ஒரு தீட்சிதர் சொன்னார். அதற்கு நான் இங்கே தான் அமர்வேன் என்று சொன்னேன். பின்னர் அவர் சென்றுவிட்டார். மற்ற அனைத்து தீட்சிதர்களும் என்னிடம் வந்து இறைவன் பிரசாதத்தை வழங்கினர். அந்த தீட்சிதர் கூறியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் அவமரியாதை என்ற செய்தி தவறானது” என்று கூறியுள்ளார்.
பூரண குணமடைந்த டி.ராஜேந்தர்: சென்னை திரும்பிய சிம்பு
நடிகரும் திரைப்பட இயக்குநருமான டி. ராஜேந்தருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நடிகர் சிலம்பரசன் தன்னுடைய படப்பிடிப்பு பணிகளை நிறுத்திவிட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைகான அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தார்.
இந்நிலையில், வெளிநாட்டு மருத்துவமனையில் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது டி. ராஜேந்தர் முழுமையாக குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியால், அங்கேயே ஒரு மாதம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. டி. ராஜேந்தர் உடல்நிலை குணமடைந்த நிலையில், சிம்பு படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார்.
நிலத்தடி நீர் எடுக்க பதிவுக் கட்டணம்: தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என அறிவிப்பு
இந்தியா முழுவதும் நிலத்தடி நீரை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில், “குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாடு உள்பட எல்லா நிலத்தடி நீர் பயன்பாட்டளர்களும் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் நிலத்தடி நீர் எடுப்பதற்கான அனுமதி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 30.09.2022-க்குள் பூர்த்தி அடைந்த விண்ணப்பம் சமர்பிப்பதற்கு ரூ.10 ஆயிரம் பதிவு கட்டணம். ஆணையத்திடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யாமல் நிலத்தடி நீர் எடுத்தல் சட்டத்திற்கு புறம்பாக கருதப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சக தலைவர், மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு எண். 3/ 2022 தமிழ்நாட்டிற்கு பெருந்தாது. நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் நீர் எடுத்தல் சம்பந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளர் வீட்டில் வருமான வரி சோதனை
‘நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளர் சந்திர சேகர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். கோவை வடவள்ளியில் உள்ள அவரின் வீடு, சந்திர சேகரின் தந்தை வீட்டில், அதிகாரிகள் 6 குழுக்களாக பிரிந்து, இன்று காலை 11 மணி தொடங்கி சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
சந்திர சேகர், பல்வேறு தொழில்களையும், கான்ட்ராக்ட் தொழில்களையும் செய்து வருகிறார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.