கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டுமுதல் இந்திய அணிக்காக மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் ஆடி வருகிறார். இந்திய அணிக்காக 232 ஒருநாள் போட்டிகளில் 7805 ரன்களை மிதாலி ராஜ் குவித்துள்ளார். 89 டி20 போட்டிகளில் 2,364 ரன்களையும், 12 டெஸ்ட் போட்டிகளில் 699 ரன்களையும் அவர் எடுத்துள்ளார்.
இவரது தலைமையின் கீழ் இந்திய அணி 2017 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக மிதாலி ராஜ் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பல ஆண்டுகளாக உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. உங்கள் ஆசிர்வாதத்துடனும் ஆதரவுடனும் எனது 2வது இன்னிங்ஸை எதிர்நோக்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 20 கோடி பாலோயர்கள் – விராட் கோலி சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 20 கோடி ஃபாலோயர்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 20 கோடி ஃபாலோயர்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர், இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இதற்கு முன் விளையாட்டு வீரர்களில் அதிக ஃபாலோயர்களை கொண்ட வீரர்களாக கால்பந்து சூப்பர் ஸ்டார்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர். ரொனால்டோ 451 மில்லியன் ஃபாலோயர்களையும், மெஸ்ஸி 334 மில்லியன் ஃபாலோயர்களையும் பெற்று முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் கோலி தற்போது 3-வது வீரராக இணைந்துள்ளார்.
ஆகஸ்டு 16-ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16-ஆம் தேதி தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் கூறியதாவது: ‘பிளஸ்-2 தேர்வு முடிவு வந்த பிறகு ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் 19.7.2022. அதாவது ஜூன் 20-ல் தொடங்கி ஜூலை 19 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். அல்லது அவரவர் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இது தவிர தமிழகம் முழுவதும் மொத்தம் 110 இடங்களிலும் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்.
விண்ணப்பங்கள் பெற்ற பிறகு சான்றிதழ் சரி பார்க்கப்படுவது 20.7.22 முதல் 31.7.22 வரை நடைபெறும். அதன் பிறகு தர வரிசை பட்டியல் 8.8.22 அன்று வெளியிடப்படும். ஆகஸ்டு 16 முதல் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு (கவுன்சிலிங்) நடைபெறும். அதன் பிறகு 22-ந்தேதியில் இருந்து பொது கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, 22.8.22 முதல் 14.10.22 வரை இட ஒதுக்கீடு நடைபெறும். இதில் துணை கலந்தாய்வு 15.10.22, 16.10.22 நடைபெறும். எஸ்.சி. கலந்தாய்வு 17, 18 ஆகிய 2 நாட்கள் நடைபெறும். 18-ந்தேதியுடன் அட்மிஷன் முடிந்து விடும். இதில் முதல் 15 ஆயிரம் பேருக்கு 1 வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும்’’
இவ்வாறு அவர் கூறினார்.
மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக புகார்: தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு
முகமது நபிக்கு எதிரான பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையாகி உள்ள நிலையில், இப்போது சூபி துறவி ஹஸ்ரத் குவாஜா மொய்னுதீன் சிஷ்டிக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக பாஜக எம்எல்ஏ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள கோஷாமஹால் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜா சிங். இவர் மீது ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் முகமது அலி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. “பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்” என்று அலி தனது புகாரில் கூறியுள்ளார்.
முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக எம்.எல்.ஏ. ராஜா சிங் மீது குற்றம் பதிவு செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. இந்த ஆண்டு பிப்ரவரியில், உத்தரப்பிரதேச வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் வெளிப்படையாக மிரட்டியதை அடுத்து, உத்தரபிரதேச வாக்காளர்களை மிரட்டியதாக ராஜா சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.