தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது, “கீழடியில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்து பார்த்ததில் சங்க காலத்திலேயே முதிர்ச்சியடைந்த நாகரீகம் என தெரியவந்துள்ளது. அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம், தொல்பொருட்கள் நேர்த்தி ஆகியவை முதிர்ச்சியான நாகரீகத்துக்கு சான்றாக உள்ளது. கீழடி அருகே உள்ள அகரத்தில் கிடைத்த மண் மாதிரியை சோதனை செய்ததில் அங்கு நெல் சாகுபடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது” என்றார். மேலும், ’’4200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு இருந்துள்ளது உறுதியாகியுள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் குடி எழுத்தறிவு பெற்றது என்பதை அறிவார்ந்த சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது’’ என்றும் முதல்வர் தெரிவித்தார்.
அசானி புயல்: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று தீவிர புயலாக மாறியுள்ளது. “அசானி புயல் காரணமாக ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும். 11-ம் தேதி ஒடிசா, வடக்கு ஆந்திரா, மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். இதன் விளைவாக தமிழகத்திலும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மயிலாப்பூர் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு
சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு நிலத்தில் ட்டப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 29-ந்தேதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த பகுதியில் வசித்து வரும் கண்ணையா (வயது 55) என்பவர், நேற்று அதிகாரிகள் வீடுகளை இடிக்க வந்தபோது திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து ஆம்புலனஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் கண்ணையா மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், பலத்த தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கண்ணையா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
பட்டணப் பிரவேசம் வருகின்ற 22-ஆம் தேதி நடைபெறும் – தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம் 27-வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி, இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போத், “பல்லக்கு மனிதனை மனிதன் சுமப்பது அல்ல. குருநாதரை சீடர்கள் சுமப்பது. இதனால் மனித உரிமை மீறல் ஏற்படுகிறது என சொல்வது அழகல்ல. குருபூஜையையொட்டி 10 நாள் விழாவில் கைப்பல்லக்கில் செல்வதும், 11-ஆம் நாளில் சிவிகைப் பல்லக்கில் செல்வதும் மரபாக உள்ளது. வருகின்ற 22-ஆம் தேதி பட்டணப் பிரவேசம் சிறப்பாக நடைபெறும்” ’ என்று ருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
நான் மர்மமான முறையில் இறந்தால்…: எலான் மஸ்க் ட்வீட்டால் பரபரப்பு
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் ட்வீட்டில், ‘நான் ஒருவேளை இறந்து விட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டை பதிவிடுவதற்கு முன்னல் அவர் ரஷிய மொழியில் ட்வீட் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் ‘ உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார். நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்து கொண்டாலும் நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்வதால் ரஷ்ய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்கலாம், அதனால் அவர் இறந்து விடலாம் என ட்விட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.