அதிமுக பொதுக்குழு தீர்மானம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஓ. பன்னீர்செல்வம் வர இருந்த நிலையில் கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக, ‘ஓ.பன்னீர்செல்வம் வருவதை அறிந்து கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதா?’ என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு இல்லை என ஜெயக்குமார் பதில் அளித்தார். பின்னர், ‘அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூன் 23ம் தேதி நடைபெறும்’ என கூறிய ஜெயக்குமார் அவசரமாக புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக சி.வி. சண்முகம், வளர்மதி இருவரும் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஓ. பன்னீர்செல்வத்தை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே எடப்பாடி ஆதரவாளர்கள் கூண்டோடு வெளியேறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் கார் மீது ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கட்சியை ஜெயக்குமார் அழித்துக் கொண்டிருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்.
வீட்டு உபயோக சிலிண்டருக்கான டெபாசிட் கட்டணம் ரூ. 2,200 ஆக அதிகரிப்பு!
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்புக்கான கட்டணம் ரூ. 750 உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் கட்டணம் ரூ.1,450ல் இருந்து ரூ. 2,200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டருக்கு வைப்புத் தொகையாக 800 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த கட்டணமும் இப்பொது ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ரெகுலேட்டர் விலையும் ரூ.150-ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வைப்பு தொகை அதிகரிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதிமுக ஒற்றைத் தலைமை பிரச்சினை; பொதுக்குழு முடிவு செய்யும் – பொன்னையன்
அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், “ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக பேசவில்லை. கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல இணைந்து செயல்படுகின்றனர். ஒற்றைத் தலைமை எல்லாம் மற்றவர்கள் கிளப்புகிற பிரச்சினை. அதுகுறித்து பொதுக்குழு முடிவு செய்யும். பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி கட்டாயமாக நடைபெறும்” என்று கூறினார்.
சென்னை – மதுரை தேஜஸ் ரயிலால் 18 கோடி நஷ்டம்: தெற்கு ரயில்வே தகவல்
சென்னை – மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்பதால் விரைவாக மதுரையை சென்றடைந்து விடுகிறது. அதேபோல, மதுரையில் இருந்து புறப்படும் தேஜஸ் ரயில் 6 மணிநேரத்துக்குள்ளாகவே சென்னையை வந்தடைந்து விடுகிறது.
இந்நிலையில், இந்த தேஜஸ் ரயிலால் அரசுக்கு கிடைக்கும் வருமானம் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு தெற்கு ரயில்வே அளித்துள்ள பதிலில், தேஜஸ் ரயிலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ்: இதுவரை 14 பேர் உயிரிழப்பு
இலங்கையில் பரவி வரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவானை பகுதியில் அண்மை காலமாக இந்த தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் தொற்றுக்குள்ளான 11 பேரும் மே மாதம் 6 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஜுன் மாதத்தில் இன்று வரை 103ஆக அதிகரித்துள்ளது. ‘75 பெண்களும் 33 ஆண்களும் 12 சிறார்களும் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்; பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.